மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ள அருணாச்சலப் பிரதேசம்; 4 பேர் உயிரிழப்பு; 21 பேர் காயம்; 90,ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு..! - Seithipunal
Seithipunal


அருணாச்சலப் பிரதேசத்தில்  அனைத்து மாவட்டங்களும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 04 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,  21 பேர் காயமடைந்துள்ளதாகவும், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், கிரண் ரிஜிஜு ஆகியோர் இரண்டாவது நாளாக இன்றும் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், முதல்வர் பெமா காண்டுவுடன் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாகவும் ஆய்வு செய்துள்ளனர்.

இந்த மழை வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கிழக்கு சியாங் மாவட்டத்தின் பாசிகாட் பகுதியை ஆய்வு செய்த அமைச்சர்கள்,  பின்னர் போயிங் கிராமத்துக்குச் சென்று சேதங்களை மதிப்பிட்டனர். இந்த கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதோடு, நெல் வயல்கள், பயிர்கள், கால்நடைகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல குடும்பங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

வெள்ளத்தினால் வீடுகளை இழந்த மற்றும் இடம்பெயர்ந்த கிராம மக்களுடன் மத்திய அமைச்சர்கள் கலந்துரையாடினர். அப்போது சிவராஜ் சிங் சவுகான், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு, மாநில நிர்வாகத்துடன் இணைந்து மத்திய அரசு நிதி மற்றும் கட்டமைப்பு உதவிகளை அளிக்கும் எனவும் உறுதியளித்துள்ளார். அத்துடன், போயிங் கிராமத்தில் வெள்ள நீரைத் தடுக்க தற்காலிக சுவர் அமைத்த கிராம மக்களின் செயல்பாட்டை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அதனை தொடர்ந்து லோயர் சுபான்சிரி மாவட்டத்தில் உள்ள யசாலியில் வெள்ள பாதிப்புகளை மத்தியக் குழு ஆய்வு செய்தது. நீப்கோ குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த குடும்பத்தினரைச் சந்தித்து அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தேவையான உதவிகளை விரைவாக வழங்கும் என்றும் தெரிவித்துள்ளதோடு, நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று அவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

28 மாவட்டங்களை கொண்ட அருணாச்சலப் பிரதேசத்தில்  ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 90,499 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 04 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மிக மோசமாக பாதிக்கப்பட்ட அப்பர் சியாங் மாவட்டத்தில் 47,357 பேரும், சியாங் மாவட்டத்தில் 23,715 பேரும், கிரா தாடி மாவட்டத்தில் 8,171 பேரும், கிழக்கு காமெங் மாவட்டத்தில் 5,895 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள அருணாச்சலப் பிரதேச ஆய்வை முடித்துக்கொண்ட மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், கிரண் ரிஜிஜு ஆகியோர், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட அண்டை மாநிலமான அசாமுக்குச் சென்று அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டனர். வான் மற்றும் தரை வழியாக ஆய்வுகளை மேற்கொண்ட அவர்கள், சேதங்களை மதிப்பிட்டு முடித்த பிறகு மத்திய தலைமையிடம் அறிக்கை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 people dead and over 90000 affected in Arunachal Pradesh due to rain and floods


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->