உத்தரகாசி காட்டாறு வெள்ளத்தில் காணாமல் போயுள்ள 28 கேரளா சுற்றுலா பயணிகள்: 05 பேர் உயிரிழப்பு: மாயமான 09 ராணுவ வீரர்களின் கதி என்ன..?
28 Kerala tourists missing in Uttarakhand floods
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் கனமழை காரணமாக காட்டாறு வெள்ளம் கரைபுரண்டோடியுள்ளது. நேற்றைய தினம் இந்த காட்டாறு வெள்ளத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்ட இந்திய ராணுவவீரகள் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த 28 பேர் கொண்ட சுற்றுலா குழு காணாமல் தற்போது போயுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களைத் தேடும் பணிகள் முழு வீச்சில்நடைபெறுகிறது.
உத்தராகண்டின் உத்தரகாசியில், தாராலி கிராமத்தில் நேற்று பகல் 01:45 மணிக்கு திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டதில், மலை உச்சியில் இருந்து சேறு, சகதியுடன் கரை புரண்டு வந்த காட்டாறு வெள்ளம் குறுக்கே இருந்த வீடுகள், ஹோட்டல்கள், விடுதிகள், கட்டடங்கள் என அனைத்தையும் அடித்து கொண்டு சென்றுள்ளது.
இதன்போது அங்கிருந்த ஏராளமான கட்டடங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து போனதில், 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதனை காரணமாக அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தற்போது காட்டாற்று வெள்ளத்தில் சேதமடைந்த பகுதிகளில் 02-வது நாளாக மீட்புப் பணிகளில் ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த உத்தரகாசி காட்டாறு வெள்ளத்தில் சிக்கி இதுவரை 05 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சில கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் உத்தரகாசி ஆட்சியர் பிரசாந்த் ஆர்யா தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தச் சம்பவம் குறித்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வருத்தம் தெரிவித்துள்ளதோடு,இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி வருவதாகவும், நிலைமையை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த 28 பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகள் குழு காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போன 28 பேரில் 20 பேர் மஹாராஷ்டிராவில் குடியேறிய கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும், ஏனைய எட்டு பேர் கேரளாவின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், நேற்று கீர் கங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒன்பது இந்திய ராணுவ வீரர்களும் காணாமல் போயுள்ளனர். ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அவர்களை தேடும் பனி தொடர்கிறது. இதுவரை மொத்தம் ராணுவ வீரர்கள் 11 பேர் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அங்கு 02-வது நாளாகவும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி கவனத்தில் கொண்டு உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன்பேசியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் உடனுக்குடன் செய்யுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
English Summary
28 Kerala tourists missing in Uttarakhand floods