அரசு மருத்துவனையில் எலி கடித்து 2 குழந்தைகள் பலி - பிரதமர் மோடி வெட்கித் தலைகுனிய வேண்டும்.. ராகுல் ஆவேசம்
2 children die after being bitten by a rat in a government hospital PM Modi should bow his head in shame Rahul is furious
இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் வார்டில் எலி கடித்ததால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவலான கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர்,“மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் எலி கடித்து இரண்டு பிறந்த குழந்தைகள் இறந்தனர். இது ஒரு தற்செயல் சம்பவமல்ல, நேரடி கொலை. இந்தச் சம்பவம் மனிதாபிமானமற்றது, கொடூரமானது, அர்த்தமற்றது. இதைப் பற்றி கேள்விப்பட்டாலே முதுகுத்தண்டில் நடுக்கம் ஏற்படுகிறது.
சுகாதாரத் துறை திட்டமிட்டே தனியார் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று சிகிச்சை வசதிகள் பணக்காரர்களுக்கே உரியது. ஏழைகள் நம்பிக்கையுடன் வரும் அரசு மருத்துவமனைகள் இனி உயிரைக் காக்கும் இடங்களாக இல்லாமல், மரணக் குகைகளாக மாறிவிட்டன.
பிரதமர் மோடியும், மத்தியப் பிரதேச முதல்வரும் வெட்கி தலைகுனிய வேண்டும். உங்கள் ஆட்சி ஏழைகளின் சுகாதார உரிமையை பறித்துவிட்டது. இன்று குழந்தைகள் தாயின் மடியில் இருந்தே பறிக்கப்படுகிறார்கள்”* என கடுமையாக குற்றம்சாட்டினார்.
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க, இந்தூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளின் சுகாதார மற்றும் பாதுகாப்பு நிலைமை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
English Summary
2 children die after being bitten by a rat in a government hospital PM Modi should bow his head in shame Rahul is furious