அறுவை சிகிச்சை செய்தும் பலன் இல்லை: மருத்துவமனைக்கு சென்ற பெண்ணுக்கு கொலை மிரட்டல்...!
surgery unsuccessful woman who went hospital received death threats
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் என்.ஜி.ஓ காலனியில் வசித்து வரும் ஷாம்பவி தேவி, கடந்த மூன்று ஆண்டுகளாக தனது செல்லப் பெண் பூனையை குடும்ப உறுப்பினரைப் போல அன்புடன் வளர்த்து வந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் பூனை திடீரென உடல்நலக் குறைவு அடைந்ததால், ராமகிருஷ்ணாபுரம் அருகே அழகாபுரியில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு டாக்டர் கிராந்தி குமார், பரிசோதனைக்குப் பிறகு அறுவை சிகிச்சை அவசியம் என்றும், சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் செலவாகும் என்றும் தெரிவித்தார். செல்லப் பிராணியின் நலனுக்காக எந்த தயக்கமும் இல்லாமல் ஷாம்பவி தேவி முழுத் தொகையையும் செலுத்தினார்.
பின்னர் நான்கு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டாலும், பூனையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.இதுகுறித்து விளக்கம் கேட்க மருத்துவமனைக்கு சென்றபோது, டாக்டர் கிராந்தி குமார் ஆத்திரமடைந்து ஷாம்பவி தேவியை தாக்கியதுடன், மீண்டும் மருத்துவமனைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து விளைவிப்பேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 31-ந்தேதி பூனையின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், மீண்டும் சிகிச்சை கோரி டாக்டரிடம் தொடர்பு கொண்டபோது, அவர் உதவி மறுத்ததோடு அவதூறாக பேசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஷாம்பவி தேவி, சைதன்யபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கால்நடை மருத்துவ சேவைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
English Summary
surgery unsuccessful woman who went hospital received death threats