ஒரே முறை செலுத்தினால் 3 வருடம் கர்ப்பத்தடை: மதுரை அரசு மருத்துவமனையின் புதிய மருத்துவ புரட்சி...! - Seithipunal
Seithipunal


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகப்பேறியல் துறை சார்பில், பெண்களின் குடும்ப நலனை முன்னிலைப்படுத்தும் வகையில் ‘இம்பிளானன் NXT’ எனப்படும் அதிநவீன கருத்தடை சாதனம் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திட்ட இயக்குநர் ஜோஸ்பின் ஹேமா, டாக்டர்கள் சித்ராதேவி, ஜெயந்தி பிரசாத், மருத்துவ இருப்பிட அதிகாரிகள் சரவணன், முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குடும்ப நலத்துறை துணை இயக்குநர் நடராஜன் மற்றும் மகப்பேறு சிகிச்சைப் பிரிவு தலைவர் காயத்ரி ஆகியோர் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களை விளக்கினர். சென்னை, தர்மபுரி போன்ற அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த தொழில்நுட்பம், தென் மாவட்டங்களில் முதன்முறையாக மதுரையில் அறிமுகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்தடை மாத்திரைகள் அல்லது காப்பர்-டி போன்ற வழக்கமான முறைகளை விட, இது பெண்களுக்கு அதிக பாதுகாப்பும், சுலபமும், நீடித்த பயனும் தரும் தீர்வாக கருதப்படுகிறது. சுமார் 3 செ.மீ நீளமுடைய தீக்குச்சி வடிவில் இருக்கும் இந்த சிறிய சாதனம், தோலின் கீழ் கையில் செலுத்தப்படுகிறது. வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு இடது கையிலும், இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு வலது கையிலும் பொருத்தப்படுவதால், அன்றாட செயல்பாடுகளில் எந்தத் தடையும் ஏற்படாது. வெளியில் இருந்து இது இருப்பதே தெரியாத அளவிற்கு அமைதியான வடிவமைப்பாகும்.
ஒருமுறை செலுத்தினால் 3 ஆண்டுகள் வரை கர்ப்பம் தரிக்காமல் பாதுகாக்கும் திறன் கொண்டது. இதில் உள்ள ஹார்மோன் மருந்து தினமும் உடலில் மெதுவாக வெளியேறி கரு உருவாகுவதைத் தடுக்கிறது.

அதேசமயம், குழந்தை பெற விரும்பினால் எந்த நேரத்திலும் சாதனத்தை அகற்றிக் கொள்ளலாம்; பின்னர் உடனடியாக இயல்பான கர்ப்பத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.பிரசவம் செய்த பெண்களுக்கே இந்த சாதனம் பொருத்தப்படுகிறது.

இதனால் ரத்தசோகை போன்ற பக்கவிளைவுகள் ஏற்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
18 முதல் 45 வயது வரையிலான பெண்கள் இதைப் பயன்படுத்தலாம். சந்தை விலை ரூ.3,000 ஆக இருந்தாலும், அரசு மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படுகிறது.

உடலில் அசௌகரியம் இல்லாமல், இதய நோய் போன்ற இணைநோய்கள் கொண்ட பெண்களுக்கும் பாதுகாப்பாக பயன்படுத்தக்கூடியது என்பதால், இது ஒரு சிறந்த மாற்று கருத்தடை முறையாக மருத்துவர்கள் பாராட்டுகின்றனர். 

3 ஆண்டுகள் முடிந்ததும் பழையதை அகற்றி புதியதை மாற்றி பொருத்திக்கொள்ளலாம்.மேலும், இந்த சாதனத்தை பொருத்துவதற்கான சிறப்பு பயிற்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 72 சாதனங்கள் கையிருப்பில் உள்ளன; தேவைக்கேற்ப கூடுதலாக அரசிடம் இருந்து பெறப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

single injection provides 3 years contraception Madurai Government Hospital new medical revolution


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->