இந்தியாவில் இதய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றமை நாட்டின் சுகாதார அமைப்புக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, இளம் வயதினரிடையே இந்நோயின் பரவல் வேகமாக அதிகரித்து வருகிகின்றமை கவலையளிக்கிறது. நவீன வாழ்க்கை முறை மாற்றங்கள் முதல் மரபணு காரணிகள் போன்ற காரணிகளால் இந்த இதய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்தியாவில் ஏற்படும் மொத்த இறப்புகளில் 31 சதவீதக்கும் மேல் இதய பாதிப்புகளால் ஏற்படுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பதிவாளா் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் அலுவலகம் 'மரணம் ஏற்படுவதற்கான காரணங்கள் அடங்கிய அறிக்கை 2021-2023'-ஐ வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, 2021-2023-ஆம் ஆண்டுவரை, நாட்டில் நோய்கள் காரணமாக ஏற்பட்ட மரணங்களில் தொற்றா நோய்களால் 56.7 சதவீதம் உயிரிழந்துள்ளதாகவும், இது 2020-22-ஆம் ஆண்டில் (கொரோனா காலம்) 55.7 சதவீதமாக இருந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தொற்று, பிரசவம், பிரசவத்திற்கு முந்தைய காலம் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த பிரச்சினைகளால் 23.4 சதவீத இறப்பு ஏற்பட்டுள்ளன. இது, கொரோனா காலமான 2020-22-ஆம் ஆண்டுகளில் 24 விழுக்காடாக இருந்துள்ளது.
இதில் குறிப்பாக, 30 வயதுக்கும் மேற்பட்டோரில் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு நேரிடும் உயிரிழப்புகளுக்கு இதய நோய்கள் பிரதான காரணமாக இருந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 31 சதவீதம் இதய பாதிப்பால் இறந்துள்ளனர் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுவாச தொற்றுகளால் 9.3 சதவீத பேரும், உடலில் திசுக்களில் ஏற்படும் கட்டிகள் தொடர்பாக 6.4 சதவீத பேரும், சுவாச பாதிப்புகளால் 5.7 சதவீத பேரும் உயிரிழந்துள்ளனர். ஜீரண மண்டல நோய்களால் 5.3 சதவீத பேரும், காய்ச்சலால் 4.9 சதவீத பேரும், சாலை விபத்து, காயங்களால் 3.7சதவீத பேரும், நீரிழிவு பாதிப்பால் 3.5சதவீத பேரும் என பல காரணத்தால் உயிரிழந்திருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

சாம்பிள் ரிஜிஸ்ட்ரேஷன் சிஸ்டம் (SRS) மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2021 முதல் 2023 வரையிலான காலத்தில், இந்தியாவில் நிகழ்ந்த இறப்புகளில் இதய நோய்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. மூன்றில் ஒரு இறப்பு இதய பாதிப்புகளால் ஏற்படுவதாகக் கூறுகிறது. இது உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளுடன் ஒத்துப்போவதோடு, இந்தியா உலகளாவிய இதய இறப்புகளில் 20 சதவீதத்திற்கும் மேல் பங்களிக்கின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 17.9 மில்லியன் இறப்புகளில் பெரும்பகுதி இதய நோய்களால் ஏற்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
இது தொடர்பாக ரேலா மருத்துவமனை மருத்துவர் அசோக் குமார் கூறியதாவது:
கொரோனாவால் இதய பாதிப்பு மரணங்கள் ஏற்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றும், கொரோனா பாதிக்கப்பட்டால் அதன் மூலம் இதயம் லேசாக பாதிக்கப்படும். ஆனால், அது சிறிது காலம் தான் இருக்கும் என்றும், அதற்கு பிறகு தானாக சரியாகி விடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளில் இதய பாதிப்பால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாகவும், அதிலும் குறிப்பாக 30 முதல் 50 வயது உடையவர்களிடம் அதிக இதய பாதிப்பு ஏற்படுகிறதாகவும், இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் தகவல் படி மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை 30 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது என்றும் அறிவித்துள்ளார்.
கொரோனா காலத்திற்கு பிறகு வாழ்க்கை முறை மொத்தமாக மாறியுள்ள நிலையில், இதய பாதிப்பு அதிகரித்து வருகிறதாகவும், கடந்த காலங்களில் வெளியில் சென்று மேற்கொள்ளும் பணிகள் அதிகமாக இருக்கும் தற்போது தொழில்நுட்பத்தால் குறைந்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.
அதாவது, வெளியில் அதிக அளவில் செல்ல வாய்ப்பு இல்லாத காரணத்தினால் வெயில் உடலில் படுவது குறைந்துவிட்டது. வெயில் உடலில் படுவதால் வைட்டமின் தொகுப்பு, நைட்ரிக் ஆக்சைடு தொகுப்பு எல்லாம் உடலில் உருவாகும் இதனால் ரத்த கொதிப்பு கட்டுப்பாட்டில் இருக்கும். வெயில் உடலில் படாமல் இருந்தால் ரத்த கொதிப்பு கட்டுப்பாட்டில் இருப்பது கடினம் ஆகிவிடும். இதனால் இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று அறிவித்துள்ளார்.

மேலும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நல்லது என்றாலும் மறுபக்கம் அது பாதிப்பை ஏற்படுத்துகிறதாகவும், குறிப்பாக உணவு பழக்கம் அதிகம் மாறிவிட்டதால், நினைத்த நேரத்தில் உணவு கிடைப்பதால் மற்றும் பல்வேறு வகையான உணவு கிடைப்பதால் பொது மக்கள் பொரித்த உணவு, இனிப்பு என பலவற்றை ஆடர் செய்து உட்கொள்கின்றனர் இதனால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாரடைப்பு ஏற்படும் முன்னர் அதற்கான அறிகுறிகள் வந்துவிடும் குறிப்பாக சக்கரை நோய், கொழுப்பு அதிகரிக்கும் இது இதய குழாயை பாதித்தால் மாரடைப்பு ஏற்படும் மூலைக்கு செல்லும் குழாயை பதித்தால் பக்கவாதம் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு சாதாரணமாக இருப்பவர்களை விட மாரடைப்பு வர 03 மடங்கு வாய்ப்புள்ளது. புகைப்பிடித்தால்0 4 மடங்கு அதிகரிக்கும். இந்த ஆய்வில் இறக்கும் போது அவர்கள் என்ன பாதிப்பால் இருப்பார்களோ அதை வைத்து தான் கணக்கு வைத்து இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி, இணை நோய் உள்ளவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாலும் அவர்கள் இதய பாதிப்பால் இறந்த கணக்கில் தான் வைத்து இருப்பார்கள் என்றும், முதலில் மக்கள் விழிப்புணவுடன் இருக்க வேண்டும், அரசாங்கம் இதற்கு என சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் எச் ஐ வி அதிக அளவில் இருந்தது தொடர்ந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் அது குறைந்துவிட்டது. அது போல இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளதோடு, சிகரெட் பெட்டகத்தின் மேல் இவ்வாறு அது பாதிக்கும் என்று குறிப்பிட்டு இருக்கிறதோ, அதேபோல உணவு பொருட்கள் மீது எழுத வேண்டும், என்ன இருக்கிறது அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து எழுத வேண்டும். என்று வலியுறுத்தியுள்ளார்.

இதயத்தை பாதுகாக்கும் வழிகள்.
காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், கொட்டைகள் மற்றும் மீன் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக உப்பு, சர்க்கரை மற்றும் தீங்கு விளைவிக்கும் கொழுப்புகளை (Trans fats) குறைத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி, ஓட்டம், நீச்சல் அல்லது யோகா செய்து வருவதோடு, உடல் பருமனைத் தவிர்க்க பி எம் ஐ -யை 18.5-24.9 வரம்பில் வைத்திருக்க வேண்டும். புகை மற்றும் மது அருந்துவதை நிறுத்த வேண்டும். போதுமான தூக்கம் (7-8 மணி நேரம்) இருக்க வேண்டும். ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். சர்க்கரை நோய் கட்டுப்பாடில் இருக்க வேண்டும்.