பாட்டி கேட்ட ஒற்றை கேள்வி.., பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்த இளைஞன்.!! - Seithipunal
Seithipunal


நண்பர் ஒருவரைக் காண்பதற்காக தேனி மாவட்டத்தில் உள்ள அவரது ஊருக்குச் சென்றிருந்தேன். தேனி வரை பஸ்ஸில் பயணித்து, தேனியிலிருந்து கம்பம் செல்லும் பஸ்ஸில் உத்தமபாளையம் வரைக்கும் பயணித்தேன். நண்பரது வீடு, உத்தமபாளையத்திற்கும், கம்பத்திற்கும் இடையே தான் உள்ளது.

ஆனால், பஸ்ஸை அந்த ஊரில் நிறுத்த மாட்டார்களாம். சிட்டி பஸ்ஸில் தான் போக வேண்டுமாம்.(கிராமத்திற்கு எதற்கய்யா சிட்டி பஸ்சு?) இதற்காக கண்டக்டரிடம் விவாதம் செய்து நேரத்தை வீணடிக்காமல், உத்தமபாளையத்தில் இறங்கி கொண்டேன்.

அவர்கள் சொன்ன சிட்டி பஸ்?-சுக்காக வெகு நேரம் காத்திருந்தேன். வரவில்லை. நான் காத்திருந்த அரை மணி நேரத்தில் 24 பேருந்துகள் சென்றன. அதில் தனியார் பேருந்து கூட, அந்த ஊரில் நிறத்த மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள். கடைசியாக ஒரு தனியார் வேன் வந்தது.

ஷேர் ஆட்டோ மாதிரி இருந்தது. நான் காக்கில்சிக்கையன்பட்டி என்ற கிராமத்திற்குப் போக வேண்டும். கேட்டேன். ஏற்றிக் கொண்டார்கள். ஏறியதும் 10 ரூபாயை, அந்த வேனில் உள்ளே இருந்த கண்டக்டர் போல் இருந்தவர் வாங்கிக் கொண்டார்.
               
வேன், அனுமந்தன்பட்டி என்ற கிராமத்தைத் தாண்டிய போது, அருகில், அங்குள்ள வயலில் வேலை செய்த ஐந்து பெண்கள் வேகமாக கையைத் தட்டிக் கொண்டே வேனை நிறுத்தச் சொன்னார்கள். இதைக் கவனித்த டிரைவரும் வண்டியை நிப்பாட்டினார்.

எல்லோரும் வியர்க்க் விறுவிறுக்க வந்து வேனில் ஏறினார்கள். அவர்களில் கடைசியாக கண்ணாடி போட்ட மிக வயதான பாட்டியும் ஏறினார். இந்த வயதிலும் வயலில் வேலை செய்து வயிற்றுப்பாட்டைப் பார்க்க வேண்டிய கட்டாயம்.

வேன் புறப்பட்டது. கண்டக்டர் அங்கிருக்கும் பெண்களிடம் எல்லாம், பத்து ரூபாய் வசூலித்தார். பாட்டி தனது சுருக்குப் பையைத் திறந்து இருக்கிற சில்லரையை எல்லாம் எடுத்துக் கொடுத்தார். அதில் ஐந்து ரூபாய் வரை தான் இருந்தது. மீதியை பை முழுக்க துலாவினார். கிடைக்கவில்லை.

அவருடன் வந்த மற்ற பெண்களிடம், “ஐந்து ரூபாய் குடு. வீட்டுக்குப் போயி தர்றேன்” என்று கேட்டார். ஆனால், அந்தப் பெண்களில் ஒருவர் கூட அந்தப் பாட்டியை நம்பி ஐந்து ரூபாய் கொடுக்க மனம் வராமல் முகத்தைத் திருப்பிக் கொண்டனர். அந்தப் பாட்டி, அந்தக் கண்டக்டரைப் பரிதாபமாகப் பார்த்தார்.
              
ஆனால் அந்த ஆளோ, “இங்க பாரு கிழவி, மிச்சம் அஞ்சு ரூபாய் குடு. இல்லேன்னா, வண்டியை விட்டு இறங்கிக்க”, என்று கத்த, டிரைவரும், அந்தச் சத்தத்தைக் கேட்டு வண்டியை நிறுத்தினார். அந்தப் பாட்டியைப் பார்க்க பாவமாக இருந்தது. “ஏம்பா வச்சிக்கிட்டா இல்லேங்கிறேன்.

நாளைக்கு வரும் போது தர்றேன்யா” என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். அந்த ஆள் கேட்கிற பாட்டைக் காணோம். நான் என் பாக்கெட்டிலிருந்து 10 ரூபாய் பணத்தை அந்த ஆளிடம் கொடுத்து, பாட்டியிடம் வாங்கிய ஐந்து ரூபாயைத் திருப்பித் தரச் சொன்னேன். அந்த ஆள் எதுவும் பேசாமல் நான் சொன்னதைச் செய்தார்.
               
அந்தப் பாட்டிக்கு வியர்த்துக் கொண்டேயிருந்தது. நான் பையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலைக் கொடுத்து தண்ணீர் குடிக்கச் சொன்னேன். அந்த தண்ணீரைக் குடித்ததும் தான் அந்தப் பாட்டிக்கு ஒரு ஆயாசமே ஏற்பட்டது. இருந்தாலும், அந்தக் கண்டக்டர் பேசியைத் கேட்டு மனம் வருத்தப் பட்டிருப்பார் போல. கண்களில் தண்ணீர் தழும்பியது. நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது. அந்த வயதான பாட்டியும் அந்த நிறுத்தத்தில் தான் இறங்கினார்.

கதவைத் திறந்து இறங்கிய அந்தப் பாட்டி, அந்தக் கண்டக்டரைப் பார்த்து, “ஏம்பா..நீ குடிக்கிற ஒரு சிகரெட்டுக்காகுமா அந்த அஞ்சு ரூபா காசு? என்று கேட்டு விட்டு, விடுவிடு என்று தள்ளாடியபடி நடக்கத் துவங்கினார். அந்த கண்டக்டரால் பதில் ஏதும் கூற இயலவில்லை. தற்போது கிராமத்தில் கூட மனிதநேயம் மடிந்து விட்டதோ, என்று தான் எனக்கு எண்ணத் தோன்றியது.
               
என்னவென்று தெரியவில்லை. இப்போதும், ஐந்து ரூபாய் தாளைப் பார்த்தால், அந்தப் பாட்டியின் தெளிவல்லாத முகம் தான் நினைவிற்கு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

grandma ask one question


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->