தமிழக பள்ளி மாணவர்களுக்கு நல்ல செய்தி! எடை குறையும் பாடப்புத்தகங்கள்!
TN School Education
தமிழ்நாட்டில் 2017ஆம் ஆண்டு தொடங்கி பயன்படுத்தப்பட்ட தமிழ் பாடப்புத்தகங்கள் தற்போது வரை தொடர்ந்துவருகின்றன. இப்புத்தகங்களில் பாடப் பகுதிகள் மிகுதியானதால், மாணவர்கள் படிப்பதில் சிரமம் அனுபவிக்கிறார்கள் என்ற புகார்கள் கல்வித்துறையை சென்றடைந்தன. இதையடுத்து, பாடங்களை சுருக்கும் நடவடிக்கையை பள்ளிக்கல்வித் துறை தொடங்கியுள்ளது.
1ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள தமிழ் பாடப்புத்தகங்களில், நீளமான பாடங்கள் குறைக்கப்படுவதோடு, மாணவர்களுக்கு பொருத்தமில்லாத பகுதிகள் நீக்கப்பட்டு, புதியமைப்பில் தொகுக்கப்படுகின்றன. முதற்கட்டமாக, 1ம் மற்றும் 2ம் வகுப்புக்கான புத்தகங்களில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொடர்ந்து, 3 முதல் 5ம் வகுப்பு வரை அதிக பக்கங்கள் கொண்ட பாடங்கள் சுருக்கப்பட்டு வருகின்றன.
மேலும், 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளில் உள்ள 9 இயல்கள் 8 ஆகவும், 9 மற்றும் 10ம் வகுப்புகளில் உள்ள 9 இயல்கள் 7 ஆகவும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளில் உள்ள 8 இயல்கள் 6 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்கள் அடிப்படையில் புதிய பாடநூல்களின் அச்சுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 2025-26 கல்வியாண்டில் புதிய பாடப்புத்தகங்கள் நடைமுறைக்கு வரும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.