"7, 8, 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது" - மத்திய கல்வி அமைச்சர் அதிரடி விளக்கம்!
Three Language Formula Not Applicable for Classes 7 8 and 9 Dharmendra Pradhan
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) கடந்த மே 15-ஆம் தேதியன்று வெளியிட்ட சுற்றறிக்கை, நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் பெரும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP) மற்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு 2023 ஆகியவற்றின் படி, 2026-27 கல்வியாண்டு முதல் 9-ஆம் வகுப்பில் மொழிப் பாடத் திட்டத்தில் சில அதிரடி மாற்றங்களை வாரியம் அறிவித்திருந்தது.
விவாதத்தைக் கிளப்பிய சிபிஎஸ்இ-யின் சுற்றறிக்கை
அந்த அறிவிப்பின்படி, வரும் ஜூலை 1, 2026 முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கட்டாயமாக மூன்று மொழிகளைப் படிக்க வேண்டும் என்றும், அவற்றில் குறைந்தது இரண்டு மொழிகளாவது இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. இதுவரை ஆங்கிலம் மற்றும் ஒரு வெளிநாட்டு மொழியைத் (Foreign Language) தேர்ந்தெடுத்துப் படித்து வந்த மாணவர்கள், திடீரென இரண்டு இந்திய மொழிகளைப் படிப்பது எளிதல்ல என்று பெற்றோர்கள் அதிருப்தி வெளியிட்டனர். மேலும், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்குத் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
மத்திய அமைச்சரின் அதிகாரப்பூர்வ விளக்கம்
இந்தக் குழப்பங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தற்பொழுது மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தேசிய நாளேடு ஒன்றுக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில், "தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கையானது 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். நடப்பு 2026-27 கல்வியாண்டில் 7, 8 மற்றும் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது" என்று திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
அமைச்சரின் இந்த விளக்கத்தின்படி, நடப்பு கல்வியாண்டில் 7 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், ஏற்கனவே நடைமுறையில் உள்ள இரு மொழிக் கொள்கையின் (Two-Language Formula) அடிப்படையிலேயே தங்களது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரை தங்குதடையின்றித் தொடரலாம். மத்திய அரசின் இந்தத் திடீர் விளக்கத்தால், கடந்த சில வாரங்களாகக் கடுமையான மன உளைச்சலில் இருந்த லட்சக்கணக்கான சிபிஎஸ்இ மாணவர்களும் பெற்றோர்களும் தற்பொழுது பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
English Summary
Three Language Formula Not Applicable for Classes 7 8 and 9 Dharmendra Pradhan