தங்களிடம் இணக்கமாகப் பழகி வந்த, சிவத்த மருது என்ற வெள்ளை மருதுவும், சின்னமருது என்ற கருத்த மருதுவும், ஊமைத்துரைக்கு ஆதரவு தந்ததோடு, தம்மையும் எதிர்ப்பதைத் தாங்கிக் கொல்ல இயலாத ஆங்கிலேயர்கள், மருது சகோதரர்களை ஒழிப்பதையே தங்களது, முதல் பணியாகக் கொண்டிருந்தனர்.
மருதுபாண்டியர்களின் அரண்மனை சிறுவயலில் இருந்தது. அப்போதெல்லாம் குதிரைச் சவாரி தான் அதிகம் இருந்ததால், மண் சாலைகள் தான் பயன்படுத்தப் பட்டன. அது தான் மாட்டுவண்டிக்கும், குதிரைப் பயணத்திற்கும் ஏற்றது.
இந்த சமயத்தில், மருதுபாண்டியர்களை வீழ்த்துவதற்காக, பீரங்கி வண்டிகளை சிறுவயல் பகுதியிலிருந்து, காளையார் கோயில் வரை கொண்டு வருவதற்காக, சாலை அமைக்கும் பணியில் ஆங்கிலேயர் ஈடுபட்டனர்.
இதை அறிந்த பெரியமருது, ஆங்கிலேயர்கள் சுலபமாக சாலை அமைக்க முடியாதவாறு தடுப்பதற்காக, தன்னிடம் உள்ள படையினரை அனுப்பி வைத்தார். அந்தப் படைக்குத் தலைமை தாங்கியவர் உதயபெருமாள் கவுண்டர்.
.JPG)
உதயபெருமாள் தன் படையினருடன் முகாமிட்டு, ஆங்கிலேயரின் பீரங்கி வண்டிகளை எப்படி தாக்கலாம், என்று கலந்தாலோசித்துக் கொண்டிருந்த போது, கர்னல் அக்னியூ, இவர்களைத் தூரத்திலேயே நோட்டம் இட்டு விட்டு, இவர்களை நோக்கி, பீரங்கியால் சுடச் சொன்னான்.
அந்த பீரங்கியிலிருந்து வந்த குண்டை நெஞ்சில் தாங்கி வீர மரணம் அடைந்தார் உதயபெருமாள்.
துப்பாக்கி கவுண்டர் என்ற பெயர் பெற்ற இவரது வீரத்தைப் போற்றும் வகையில், திருப்பாச்சேத்தியில் உள்ள சிவன் கோயிலில், இவர் துப்பாக்கி சுடுவது போல் தோற்றம் கொண்ட ஒரு சிலையை அமைத்தனர் மருதுபாண்டியர்.
உதயபெருமாள் ஆங்கிலேயரின் படையில் பணி புரிந்து, துப்பாக்கி சுடுவதில் திறம்பட் பயிற்சி பெற்றிருந்தார்.
அது மட்டுமல்லாமல், எரி குண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள் செய்வதிலும் தேர்ச்சி பெற்றவர்.
ஆங்கிலேயரிடம் கற்ற போர்க் கலையை, அவர்களுக்ககு எதிராகவே காட்டும் காலம் வந்தது. அந்நியர் ஆதிக்கத்தை எதிர்த்த மருதுபாண்டியர்களின் படையில் சேர்ந்தவுடன், இவரது போர்த்திறனைக் கண்டு வியந்த மன்னர் இருவரும், இவரைத் தங்களது துப்பாக்கிப் படைக்குத் தலைவனாக்கினர்.
.JPG)
துப்பாக்கி சுடுவதில், வல்லவரான உதயபெருமாள் காலப்போக்கில், துப்பாக்கி கவுண்டர் என்றே அழைக்கப் பட்டார்.
அத்துடன், திருப்பாச்சேத்தியின் அம்பலகாரராகவும் நியமனம் செய்யப்பட்டார். இதனால், திருப்பாச்சேத்தியில் உள்ள தனது வீட்டின் அருகே, சவுக்கை என்ற பொது மண்டபத்தினை அமைத்து, ஊர் மக்களின் பிரச்சினைகளை பஞ்சாயத்து செய்தார்.
இப்போதும் அந்த சவுக்கை என்று சொல்லப்படும் மண்டபம் புதுப்பித்துக் கட்டப்பட்டிருக்கிறது. அதனைக் கவுண்டவலசு என்று அழைக்கிறார்கள்.
இத்துடன், திருப்பாச்சேத்தியில் வெட்டரிவாள் படை என்ற ஒரு படைப் பிரிவையும் அமைத்தார் உதயபெருமாள். இதற்காக, திருப்பாச்சேத்தியிலேயே, அரிவாள் செய்யும் பட்டறைகள் உருவாகின.
அப்போதிருந்து இன்று வரை, திருப்பாச்சேத்தி அரிவாள் செய்வதில் முன்னனியான ஊராகத் திகழ்ந்து வருகிறது.
வெட்டரிவாளை எப்படி பயன்படுத்தி, எதிரியை வீழ்த்துவது என்ற போர்க் கலையையும், துப்பாக்கி கவுண்டர், தனது படையினருக்குத் திறம்படக் கற்றுத் தந்தார்.
தனது மேற்பார்வையில் இருந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான போர் வீரர்களுக்கு, துப்பாக்கி சுடும் பயிற்சியை அளித்தார். இதற்காக, சிவகங்கை மாவட்டத்தில், சத்ரபதியில் ஒரு கோட்டையையும் அமைத்தார்.
படையினருக்குத் தேவையான துப்பாக்கிகளைத் தயாரிப்பதற்காக, சேலம் மாவட்டம் ஓமலூர் தாரமங்கலத்தில், துப்பாக்கி தொழிற்சாலையை ரகசியமாக நிறுவி, துப்பாக்கிகளையும், வெடி குண்டுகளையும் தயாரித்தார்.
சேலத்திற்கு அருகில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கன்னக்குளம் என்ற கிராமத்தில் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தவர் இந்த உதயபெருமாள்.
அங்கிருந்து தான், ஆங்கிலேயரிடம் துப்பாக்கி பயிற்சி பெற்றிருந்தார். எனவே, இந்த இடத்தில் வெடி மருந்துக்கான மூலப்பொருட்களை அதிகமாகப் பெற முடிந்தது.
.jpg)
ஆங்கிலேயருக்கு எதிரான போரில், மருதுபாண்டியருடன் தன்னை முழுதுமாக ஈடுபடுத்திக் கொண்டு அவர்களுக்காக உயிர் துறந்த உதயபெருமாள், இன்னும் துப்பாக்கி கவுண்டராக அப்பகுதியில் போற்றப்பட்டு வருகிறார்.
திருப்பாச்சேத்தி சிவன் கோயிலில் இவரது சிலையைப் பார்த்தாலே, இவர் எப்படிப்பட்ட வீரராக இருந்திருப்பார் என்பதை எளிதில் உணர்ந்து கொள்ள முடியும்.
சிவகங்கைச் சீமைக்காக உயிர் தியாகம் செய்த இந்த வீரனுக்கு, கோயிலில் சிலை வைத்தது மிகப் பொருத்தமானதே!