ஓணம் வந்தல்லோ... அத்திப்பூ... விதவிதமான சமையல்... களைகட்டுகிறது.! - Seithipunal
Seithipunal


ஓணம் பண்டிகை:

கேரளாவின் பாரம்பரியமிக்க ஓணம் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாவாகும். கேரளாவில் மட்டுமல்லாது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஓணம் பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து திருவோண நட்சத்திரம் வரை பத்து நாட்களும் கொண்டாடப்படுகிறது.

மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கை அடக்கிட, வாமன அவதாரம் எடுத்த திருமாலை வணங்கியும், ஆண்டுக்கு ஒருமுறை தன் மக்களை காண வரவேண்டும் என வரம் வாங்கிய மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக கேரள மக்கள் கொண்டாடும் திருவிழா தான் ஓணம் பண்டிகை.

அத்திப்பூ கோலம் :

ஓணம் பண்டிகையின் சிறப்பு மகாபலி மன்னனை மகிழ்ச்சியோடு வரவேற்கும் விதமாக வீட்டின் வாசலில் மன்னன் மனம் மகிழ அத்திப் பூக்கோலம் போடுவார்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான பூக்கள் இடம்பெறும். முதல் நாள் ஆண்கள் பறித்து வரும், 'அத்திப்பூ" என்ற ஒரு வகை பூவோடு ஆரம்பிக்கும் இந்த கோலம், இரண்டாம் நாள் இரண்டு வகை பூக்கள், மூன்றாம் நாள் மூன்று வகை பூக்கள் என நாளுக்கு நாள் மெருகேறி பத்தாம் நாள், பத்து வகையான பூக்களைக் கொண்டு மிகப்பெரிய கோலமாக மலரும்.

ஓணம் ஸ்பெஷல் உணவு :

ஓணம் பண்டிகையின்போது கசப்பை தவிர்த்து 64 வகையான உணவு, ஒன்பது வகையான சுவையுடன் தயாரித்து விருந்து படைப்பார்கள். இந்த உணவு படையலை, 'ஓண சத்யா" என்று அழைக்கின்றனர்.

புது அரிசி மாவில் செய்த அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப்புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம் காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என பல வகையான உணவுகளை தயாரித்து கடவுளுக்கு படைப்பார்கள். பெரும்பாலான உணவுகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும்பங்கு வகிக்கிறது.

இவ்வகை உணவை சாப்பிட்ட பிறகு செரிமானம் ஆவதற்கு, இஞ்சிக்கறி, இஞ்சிப்புளி உணவில் சேர்த்துக் கொள்வார்கள்.

கசவு :

கசவு என அழைக்கப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து, தங்கள் மனதிற்கு பிடித்த மகாபலி மன்னனை நினைத்தும், வரவேற்றும் மகிழ்ந்து ஆடிப்பாடி நடனம் ஆடுவர்.

விளையாட்டு :

ஓணம் பண்டிகையில் கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களரி, படகுப்போட்டிகள், பாரம்பரிய கதகளி நடனப் போட்டி என பத்து நாட்களுமே களைக்கட்டும்.

யானை திருவிழா :

பத்தாம் நாள் சிறப்பாய் அமைவது இந்த யானை திருவிழாவால் தான். யானைகளுக்கு பொன் மற்றும் மணிகளால் தங்க கவசமிட்டு, பூத்தோரணங்களால் அலங்கரித்து யானைகளுக்கு என தயாரித்த சிறப்பு உணவுகளை அளித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர்.

மனநிறைவு :

பத்து நாட்களின் விருந்து, கலை நிகழ்ச்சிகள், உணவு படையல், போட்டி என அனைத்தையும் கண்டுகளித்து, தாம் விட்டு வந்த தம் நாட்டு மக்கள் எல்லா செல்வங்களுடனும், வளத்துடனும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்கிற மனநிறைவுடன் மகாபலி மன்னர் பாதாள லோகத்திற்கு திரும்பி செல்வதாய் ஐதீகம் என்று நினைத்து மகிழ்கின்றனர்.

கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும், மக்கள் ஓணம் பண்டிகையை இன்று மகிழ்ச்சியுடன் கொண்டாடி கொண்டிருக்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

onam festival


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->