எதற்கு சென்சார்...? - தணிக்கை வாரியத்தை கடுமையாக சாடிய மன்சூர் அலிகான்
Why censorship Mansoor Ali Khan severely criticized censor board
முரளி கிரிஷ். எஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருப்பு பல்சர்’ நாளை மறுநாள் (30-ந்தேதி) திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது. இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ரேஷ்மா வெங்கடேஷ், மதுனிகா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் விளம்பர விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு பேசினார். சமீப காலமாக நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்து வந்த மன்சூர் அலிகான், இந்த விழாவில் எதிர்பாராத விதமாக விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

குறிப்பாக, விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க தாமதம் செய்யப்படுவதாக கூறி, தணிக்கை வாரியம் மற்றும் மத்திய அரசை கடுமையாக சாடினார்.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது,"திரைப்படம் எடுப்பது என்பது ஒரு படைப்பாளியின் அடிப்படை சுதந்திரம்.
ஆனால் அந்த சுதந்திரம் இப்போது மெல்ல மெல்ல பறிக்கப்பட்டு வருகிறது. படைப்பாளிகள் நசுக்கப்படுகிறார்கள். மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தும் திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், விஜயின் ‘ஜன நாயகன்’ படத்தை மட்டும் வெளியிட முடியாது என்று தணிக்கை வாரியம் தடையாக நிற்பது எந்த வகையில் நியாயம்? மத்திய அரசு ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறது? ஒரு திரைப்படத்தை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்கிறார்கள்.
அதில் முதலீடு செய்த தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை தணிக்கை வாரியம் ஏன் கணக்கில் எடுக்க மறுக்கிறது? இந்த படத்தை வெளியிடுவதால் அவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படப் போகிறது? இது விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
ஆனால் பொங்கல் பண்டிகைக்கு அந்த படத்தை திரைக்கு வரவிடாமல் தடுத்தார்கள். இப்போது அந்த படத்தை முழுமையாக வெளியிடக்கூடாது என்ற நோக்கில் செயல்படுகிறார்கள்.தணிக்கை வாரியத்தின் இந்த நடவடிக்கை, தனிமனித சுதந்திரத்தை அப்பட்டமாக பறிக்கும் செயல் போலவே தெரிகிறது.
அதற்கு மத்திய அரசும் துணை நிற்கிறது. நாட்டில் ஏராளமான மக்கள் பிரச்சனைகள், அடக்குமுறைகள், அத்துமீறல்கள் நடைபெறும்போது கண்டு கொள்ளாத அரசு, இதுபோன்ற விஷயங்களில் மட்டும் முழு வேகத்தில் செயல்படுவது பயத்தை ஏற்படுத்துகிறது.
இந்த போக்கு தொடர்ந்தால், நாளை படைப்பாளியின் சுதந்திரம் என்ன ஆகும்? இதை நினைத்தாலே மனம் வேதனைப்படுகிறது. நான் என் மனதில் தோன்றியதை தயங்காமல் பேசுவேன். எந்த இடத்திலும் பயம் இல்லாமல் குரல் கொடுப்பேன். எனக்கு யாரைப் பற்றியும் கவலை இல்லை.
திரையுலகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.இந்த நிலை தொடர்ந்தால், இனி திரைப்படங்கள் சுதந்திரமாக வெளிவர முடியாது. என்னை கேட்டால், தணிக்கை வாரியமே எதற்கு என்று கேட்பேன். நல்ல படங்களை மக்கள் தான் மதிப்பீடு செய்து தீர்ப்பளிக்க வேண்டும். அதுவே போதும். பிறகு எதற்காக தணிக்கை வாரியம்?” என்று ஆவேசமாக பேசினார்.
English Summary
Why censorship Mansoor Ali Khan severely criticized censor board