'காந்தாரா' பெண் தெய்வம் நடிப்பு: விமர்சனம் எழுந்ததால் மன்னிப்புக் கோரிய ரன்வீர் சிங்!
Ranveer Singh kantara 2
நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்து வெற்றி பெற்ற 'காந்தாரா' திரைப்படத்தின் தொடர்ச்சியாக 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், கோவாவில் நடந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில், ரிஷப் ஷெட்டியின் நடிப்பை கிண்டல் செய்யும் விதமாகப் பேசியதாகக் கூறி, நடிகர் ரன்வீர் சிங் மீது மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
ரன்வீர் சிங் பேச்சு
விழாவில் கலந்துகொண்ட ரன்வீர் சிங், 'காந்தாரா' படத்தில் பெண் தெய்வம் ரிஷப் ஷெட்டியின் உடலுக்குள் செல்லும்போது அவர் வெளிப்படுத்திய நடிப்பு அபாரமாக இருந்ததாகப் பேசியதுடன், அதேபோன்ற பாவங்களைக் கேலி செய்யும் விதமாக நடித்தும் காட்டினார்.
விமர்சனம்: ரன்வீர் சிங் பெண் தெய்வத்திற்கும், பேய்க்கும் வித்தியாசம் தெரியாமல் கேலி செய்ததாகவும், இது தங்கள் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களைப் பதிவு செய்தனர்.
மன்னிப்பு மற்றும் விளக்கம்
இந்தச் சர்ச்சை மிகப்பெரிய அளவில் உருவெடுத்ததைத் தொடர்ந்து, நடிகர் ரன்வீர் சிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்து மன்னிப்புக் கோரினார்:
"படத்தில் ரிஷப் ஷெட்டியின் அசுரத்தனமான நடிப்பை ஹைலைட் செய்ய வேண்டும் என்பதுதான் என் நோக்கம். ஒரு நடிகராக அந்தக் குறிப்பிட்ட காட்சியை நடிப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதனை கச்சிதமாகச் செய்த அவரைப் போற்றுகிறேன். நம் நாட்டில் பின்பற்றப்படும் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளை நான் எப்போதும் மதித்துள்ளேன். நான் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தியிருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்," என அவர் பதிவிட்டுள்ளார்.