அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களை அரவணைக்கும் ஸ்டாலின்! 20 தொகுதிகள்..அதிர்ச்சியில் திமுக சீனியர்கள்!
Stalin embraces those who joined DMK from AIADMK 20 constituencies DMK seniors in shock
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது அணியை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. பொதுவாக தேர்தல் காலங்களில் எதிர்க்கட்சிகளில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுப்பது அரசியலில் சாதாரணமாக நடைபெறும் ஒன்று. ஆனால் இந்த முறை அதிமுகவில் இருந்து திமுகவுக்கு இணையும் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீப காலமாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், நிலோஃபர் கஃபீல், முன்னாள் எம்பி அன்வர் ராஜா, கார்த்திக் தொண்டைமான், ஜெயந்தி பத்மநாபன், மருது அழகுராஜ், மைத்ரேயன், பழனியப்பன் உள்ளிட்ட பலர் திமுகவில் இணைந்துள்ளனர். முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என பட்டியல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்குப் பின்னால் திமுக ஒரு திட்டமிட்ட அரசியல் கணக்குடன் செயல்படுகிறது என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அதாவது, தங்கள் கட்சிக்கு வலுவான பகுதிகளில் மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகள் வலுவாக உள்ள பகுதிகளிலும் தாக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று கூறப்படுகிறது.
உதாரணமாக, ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் செந்தில் பாலாஜி. பின்னர் அவர் திமுகவில் இணைந்ததும் கரூர் மாவட்டத்தில் திமுக வலுவாகியது என்று கூறப்படுகிறது.
அதேபோல், டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கம் பல ஆண்டுகளாக திமுகவுக்கு பெரிய சவாலாக இருந்தவர். தற்போது அவர் திமுகவில் இணைந்ததால் அந்த தொகுதியில் திமுகக்கு சிக்கல் குறையும் எனக் கருதப்படுகிறது.
மேலும், கோவில்பட்டி – மாணிக்கராஜா, ராமநாதபுரம் – அன்வர் ராஜா, ஆலங்குளம் – மனோஜ் பாண்டியன் போன்ற தலைவர்கள் தங்கள் பகுதிகளில் வாக்கு செல்வாக்கு கொண்டவர்களாக பார்க்கப்படுகின்றனர். இதனால் அந்தந்த தொகுதிகளில் திமுக வலுப்பெறும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், திமுகவில் இணையும் தலைவர்களுக்கு சுமார் 20 தொகுதிகள் வரை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொகுதி நிலவரத்தை ஆய்வு செய்த பின்னரே இந்த இணைப்புகள் நடைபெறுகின்றன என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் கடந்த தேர்தலில் வென்ற சில தொகுதிகளில் இழப்பு ஏற்பட்டாலும், அதை மற்ற பகுதிகளில் ஈடு செய்ய முடியும் என்ற அரசியல் கணக்கை முதல்வர் மு.க. ஸ்டாலின் வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் திமுக, வெறும் பெயருக்கு தலைவர்களை மட்டும் சேர்ப்பதை விட களத்தில் பணியாற்றும் செயல்வீரர்களை அதிகமாக இணைக்க முயற்சி செய்து வருகிறது. ஓபிஎஸ், வைத்திலிங்கம், கார்த்திக் தொண்டைமான், மருது அழகுராஜ் போன்றவர்கள் தங்கள் பகுதிகளில் செயலில் ஈடுபடும் தலைவர்களாக கருதப்படுகின்றனர்.
இதன் மூலம் அதிமுகவின் அமைப்பையும் பலவீனப்படுத்தலாம் என்று திமுக கணக்கிடுகிறது என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதற்கிடையில், 2021 சட்டசபைத் தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் களத்தில் செயல்பட்ட நிர்வாகிகள் காரணமாகவே அந்த கட்சி ஒரு அளவிற்கு வாக்குகளைப் பெற்றது என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த முறை கட்சியில் இருந்து பலர் வெளியேறினாலும் அதிமுக தலைமை அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்ற அதிருப்தி கட்சித் தொண்டர்களிடையே உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
Stalin embraces those who joined DMK from AIADMK 20 constituencies DMK seniors in shock