திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி – இறங்கி வராத 2 கம்யூனிஸ்ட் கட்சிகள்.. கறார் காட்டும் திமுக.. புது பிரச்சனை
Seat sharing in the DMK alliance is a drag 2 communist parties are not coming forward DMK is showing resolve New problem
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்பதால், அதற்கு முன்பாகவே கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடிக்க திமுக முயற்சி செய்து வருகிறது.
ஆனால் இந்த முறை திமுக கூட்டணியில் பல புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் உருவாகியுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், பிரேமலதா விஜயகாந்தின் தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன. மேலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் திமுகவுடன் இணைந்ததும் கூட்டணி கணக்குகளை மாற்றியுள்ளது.
இதனால் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து வழங்குவது திமுக தலைமையிற்கு சவாலாக மாறியுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா 6 தொகுதிகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த முறை இரு கட்சிகளும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது.
ஆனால் திமுக தரப்பில் அந்த கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என்று திமுக பேச்சுவார்த்தை குழு தெளிவாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையிலான குழு நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவை மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது சிபிஎம் தரப்பில் குறைந்தபட்சம் 6 தொகுதிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் திமுக தரப்பு தனது நிலைப்பாட்டில் மாற்றமின்றி 5 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கூறுகையில், “நாங்கள் முதலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்டோம். பின்னர் கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்ந்ததால் கோரிக்கையை குறைத்தோம். ஆனாலும் கடந்த முறை அளித்ததை விட அதிக தொகுதிகள் வேண்டுமென கேட்டுள்ளோம். இதை முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசித்து தெரிவிப்பதாக திமுக கூறியுள்ளது. தொகுதி பங்கீடு சுமூகமாக முடியும் என நம்புகிறோம்” என்றார்.
அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், திமுக தரப்பு 5 தொகுதிகள் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதையடுத்து சிபிஐ மாநில குழு இன்று கூட்டம் நடத்தி அடுத்த கட்ட முடிவுகளை ஆலோசிக்க உள்ளது.
இதனால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவுக்கு வராமல் இழுபறியாக நீடித்து வருகிறது.
English Summary
Seat sharing in the DMK alliance is a drag 2 communist parties are not coming forward DMK is showing resolve New problem