சம்பவம் செய்த மீம்ஸ் கிரியேட்டர்கள்! பயந்த தனுஷ் மகன்? பொது நிகழ்ச்சிகளில் வீடியோ எடுப்பதை நிறுத்திய லிங்கா!
Meme creators who committed the incident Dhanush son was scared Linga stopped taking videos at public events
சமூக வலைதளங்களில் பரவும் மீம்கள், தனிநபர்களை எவ்வளவு ஆழமாக பாதிக்கக்கூடும் என்பதற்கு, நடிகர் தனுஷ்-இன் இளைய மகன் லிங்கா ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளார். பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த லிங்கா, சமீப காலமாக அந்தப் பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை இயக்குநரும் தயாரிப்பாளருமான சவுந்தர்யா ரஜினிகாந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.
லிங்கா என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு வருவது, அவரது கையில் எப்போதும் இருக்கும் செல்போன் தான். தாத்தா ரஜினிகாந்த்-ன் பட விழாக்கள், தந்தை தனுஷின் இசை வெளியீட்டு விழாக்கள் என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், முன் வரிசையில் அமர்ந்து வீடியோ பதிவு செய்வதே லிங்காவின் வழக்கமாக இருந்தது. இதனை கவனித்த நெட்டிசன்கள், ஆரம்பத்தில் அதை ஜாலியாக மீம்களாக மாற்றினர். “லிங்கா போனில் எத்தனை ஜிபி ஸ்டோரேஜ் இருக்கும்?” என்ற கேள்விகளில் தொடங்கிய கிண்டல், ஒரு கட்டத்தில் வரம்பு மீறி, புதிய படங்களை கசியவிடும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ அட்மினே லிங்கா தான் என்கிற அளவுக்கு பரவியது.
இந்த தொடர்ச்சியான கிண்டல்கள் லிங்காவை மனதளவில் பாதித்துள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் ‘வித் லவ்’ படத்தை தயாரித்த விசாகன் உடன் அளித்த பேட்டியில் சவுந்தர்யா ரஜினிகாந்த், “லிங்கா இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டான். எங்கு சென்றாலும் அவனைப் பற்றியே பேசுகிறார்கள். ஆனால், தொடர்ந்து கிண்டல் செய்யப்பட்டதால் அவனுக்கு ஒரு தயக்கம் வந்திருக்கலாம். அதனால் தான் இப்போது அவன் வீடியோ எடுப்பதை நிறுத்திவிட்டான்” என்று கூறியுள்ளார்.
லிங்காவின் இந்த மாற்றத்தை, அண்மையில் நடைபெற்ற இட்லி கடை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் காண முடிந்தது. அன்று செல்போன் எடுக்காமல் அமைதியாக அமர்ந்திருந்த லிங்காவை பார்த்து, தனுஷ் மேடையிலேயே “என்ன லிங்கா, எங்களை வீடியோ எடுக்கவில்லையா?” என்று ஜாலியாக கேட்டார். அந்த தருணத்தில் வெட்கத்தில் தலைகுனிந்த லிங்காவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
லிங்கா ஒரு பக்கம் கேமராவை ஓரம் கட்டியிருக்கும் நிலையில், தனுஷின் மூத்த மகன் யாத்ரா சினிமாவில் காலடி எடுத்து வைக்கத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாத்ராவை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் படத்தை தனுஷே இயக்கி, தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. யாத்ராவின் தோற்றம் இளம் வயது ரஜினிகாந்தை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
ஒருபுறம் யாத்ராவின் ஹீரோ அறிமுகம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், மற்றொரு புறம் லிங்கா எதிர்காலத்தில் ஒளிப்பதிவாளராகவோ அல்லது நடிகராகவோ வருவார் என்ற நம்பிக்கையையும் ரசிகர்கள் கைவிடவில்லை. தற்போது விமர்சனங்களால் ஒதுங்கி இருந்தாலும், தனுஷின் இரு மகன்களும் எதிர்காலத்தில் தமிழ் திரையுலகில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
English Summary
Meme creators who committed the incident Dhanush son was scared Linga stopped taking videos at public events