‘ஜன நாயகன்’ ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? – விஜய் பிறந்தநாளுக்குத்தான் ஜனநாயகன் வெளியாக வாய்ப்பு?
Is the release of Jananayakan being postponed again
நடிகர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீடு குறித்து மீண்டும் குழப்ப நிலை உருவாகியுள்ளது. பிப்ரவரி மாதத்திலேயே படம் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, ரிவைசிங் கமிட்டி இதுவரை படத்தை பார்க்கவே நேரம் ஒதுக்கவில்லை என்ற தகவல் பரவியதால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் “பிப்ரவரி நாயகன் இல்லை, ஜூன் நாயகன்!” என ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்ட கதை என்பதால், இது தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என ரசிகர்கள் முன்னரே கணித்திருந்தனர்.
முதலில் இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி படம் வெளியாகும் என தகவல்கள் வெளியானது. அது சாத்தியமாகாத நிலையில், பிப்ரவரி 20 அல்லது 26ஆம் தேதிக்குள் படம் திரைக்கு வரும் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் வெளிநாட்டு விநியோகஸ்தர் தரப்பில் இருந்து வெளியான அறிக்கையால் ஏப்ரல் மாதம் வரை வெளியீடு சாத்தியமில்லை என்பது தெளிவாகியுள்ளது.
மே மாத வெளியீடும் சாத்தியம் குறைவு என கூறப்படுகின்ற நிலையில், தற்போது ஜூன் மாதமே இலக்கு என திரைப்பட வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக, விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி வருவதால், ஜூன் 18ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியிட்டால் நீண்ட வார இறுதி வசூலைப் பெற முடியும் என்ற கணக்கீடும் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், “ஜூனில் வந்தால் டைட்டில் கார்டே வெறித்தனமாக மாறும்” என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கெத்து காட்டி வருகின்றனர். அதே நேரத்தில், தேர்தலுக்கு முன்பே படம் வெளியானால் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ‘ட்ரீட்’ ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜன நாயகன் திரைப்படம் எப்போது சென்சார் மற்றும் ரிவைசிங் பிரச்னைகளைத் தீர்த்து திரைக்கு வரும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்பதே தற்போது ரசிகர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
English Summary
Is the release of Jananayakan being postponed again