காதலர் தினத்தில் தனுஷ் 2வது திருமணமா? – ரகசிய காதல் கிசுகிசு தீவிரம்! யார் அந்த நடிகை தெரியுமா?
Is Dhanush getting married for the second time on Valentine Day Secret love gossip is intense Do you know who that actress is
கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் நேரத்தில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, ஒட்டுமொத்த திரையுலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர். பல வருட திருமண வாழ்க்கைக்கும், இரண்டு குழந்தைகளுக்கும் பிறகு வெளியான இந்த அறிவிப்பு பெரும் பேசுபொருளாக மாறியது.
இதனைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விவாகரத்துக்காக நீதிமன்றத்தை அணுகிய தனுஷ், நவம்பர் 27, 2024 அன்று சட்டபூர்வமாக விவாகரத்தை பெற்றார். அதன் பின்னரே, நடிகை மிருணாள் தாகூருடன் தனுஷ் காதல் உறவில் இருப்பதாக கிசுகிசுக்கள் பரவத் தொடங்கின. ஆனால் இந்த வதந்திகளை இருவருமே இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. மிருணாள் தாகூர் கூட, “தனுஷ் எனது நல்ல நண்பர் மட்டுமே” என கூறி காதல் கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில், தற்போது பாலிவுட் திரையுலகில் ஒரு புதிய பரபரப்பான தகவல் தீயாய் பரவி வருகிறது. அதாவது, வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று நடிகர் தனுஷ் தனது இரண்டாவது திருமணத்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. Free Press Journal, Gulte உள்ளிட்ட சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் படி, இந்த திருமணம் மிக ரகசியமாக நடைபெறவுள்ளதாகவும், நெருங்கிய குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணம் நடந்த காலத்திலேயே, இந்த உறவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முழுமையாக சம்மதம் காட்டவில்லை என்ற பேச்சுக்கள் இருந்தன. இருப்பினும், மகளின் விருப்பத்திற்காக அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. பின்னர், ஐஸ்வர்யா இயக்குநராக அறிமுகமானபோது, தனுஷையும் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனையும் வைத்து ‘3’ படத்தை இயக்கியதிலிருந்து பல்வேறு வதந்திகள் எழுந்தன. அவையனைத்தையும் கடந்து, இரண்டு மகன்களை வளர்த்து வந்த இந்த தம்பதியினர், 2022ஆம் ஆண்டு திடீரென பிரிவை அறிவித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
பிரிவுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்தினார். ஒரு ஆல்பம் பாடலை இயக்கிய அவர், பின்னர் தந்தை ரஜினிகாந்தை வைத்து ‘லால் சலாம்’ படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் பெரிய தோல்வியை சந்தித்தது. மறுபுறம், தனுஷ் ‘ராயன்’, ‘இட்லி கடை’ போன்ற படங்களை இயக்கியும் நடித்தும் வந்தார். அதோடு, தெலுங்கில் ‘குபேரா’, இந்தியில் ‘தேரே இஷ்க் மே’ போன்ற படங்கள் மூலம் பான் இந்தியா அளவில் கவனம் ஈர்த்தார். சமீபத்தில் அவரது ‘கர’ திரைப்பட அறிவிப்பும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், தனுஷ் – மிருணாள் தாகூர் இருவரும் ரகசியமாக காதலித்து வருகிறார்கள் என்றும், அந்த உறவின் அடுத்த கட்டமாக காதலர் தினத்தில் திருமணம் நடைபெறலாம் என்றும் கூறப்படும் தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் ஆவலை உருவாக்கியுள்ளது. சமீப காலமாக சம்யுக்தா, சமந்தா உள்ளிட்ட நடிகைகள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், தனுஷும் அந்த வரிசையில் இணையப்போகிறாரா? இது குறித்து அவர் அல்லது மிருணாள் தாகூர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா? என்பதே தற்போது ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் கேள்வியாக உள்ளது.
English Summary
Is Dhanush getting married for the second time on Valentine Day Secret love gossip is intense Do you know who that actress is