விஜய்யின் பி.ஆர்.ஓவா மாறிய ஹெச்.வினோத்?மறைமுகமாக சிவகார்த்திகேயனை அட்டாக் செஞ்சாரா?
H Vinoth who became Vijay PR Did he secretly attack Sivakarthikeyan
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவில் நேற்று முன்தினம் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் பேசிய உரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இயக்குநர் ஹெச். வினோத் பேசிய சில கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளன. குறிப்பாக, அவரது பேச்சு நடிகர் சிவகார்த்திகேயனை மறைமுகமாக குறிவைத்ததாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய்யின் கடைசி படம் என கூறப்படும் ஜனநாயகன் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. இன்னும் சில நாட்களே ரிலீஸுக்கு உள்ள நிலையில், இந்த படம் ரசிகர்களால் திருவிழா போல கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. முதல் முறையாக விஜய் படத்தின் ஆடியோ லான்ச் வெளிநாட்டில் நடைபெற்றதால், மலேசியாவில் வசிக்கும் ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதனால் மலேசியா முழுவதும் ஜனநாயகன் மயமாக மாறியது.
விழாவில் பேசிய விஜய், “கடந்த 30 வருடங்களாக எனக்கு ஒன்று என்றால் தியேட்டரில் ரசிகர்கள் நின்றார்கள். இனி வரும் 33 ஆண்டுகளுக்கு அவர்களுடன் நான் நிற்கப்போகிறேன். எனக்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக சினிமாவை நான் விட்டுக்கொடுக்கிறேன். நான் நன்றி மட்டும் சொல்லிவிட்டு போகிறவன் இல்லை. நன்றிக்கடனை தீர்த்துவிட்டுத்தான் போவேன்” என உருக்கமாக பேசினார். இந்த பேச்சு ரசிகர்களை உணர்ச்சிவசப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் ஹெச். வினோத், “ஜனநாயகன் ரீமேக் படம் என்று சிலர் சொல்கிறார்கள். பாதி ரீமேக் என்றும் சொல்கிறார்கள். இன்னும் சிலர் இந்தப் படத்தில் முன்னும் பின்னும் இடைவெளி இருக்கும், அந்த இடத்தில் புகுந்து படத்தை அடிச்சிடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். ஐயா, இது தளபதி படம்” என கூறினார்.
இந்த கருத்துதான் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. “உள்ளே புகுந்து அடிச்சிடலாம்” என்ற அவரது வார்த்தைகள், ஜனநாயகன் படத்திற்கு போட்டியாக வெளியாக உள்ள சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தையும் அதன் குழுவையும் குறிப்பதாக ரசிகர்கள் ஒரு தரப்பு கருத்து தெரிவித்து வருகின்றனர். ஜனநாயகன் ரிலீஸுக்கு நேரடியாக போட்டி வருவதை விரும்பவில்லை என்பதை வினோத் மறைமுகமாக சுட்டிக்காட்டியதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், அஜித் நடித்த மூன்று படங்களை இயக்கிய காலத்தில் ஹெச். வினோத் அளித்த பேட்டிகளில் சினிமா, ரசிகர்கள் குறித்து மிகவும் பக்குவமாக பேசியவர், தற்போது விஜய்யின் பிஆர் ஓ போல பேசுகிறார் என்ற விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இதனால், ஹெச். வினோத்தின் இந்த பேச்சு தேவையற்ற சர்ச்சையை உருவாக்கியுள்ளதாகவும், விழாவின் மையமான ஜனநாயகன் படத்தின் மீதான கவனத்தை வேறு திசைக்கு திருப்பியுள்ளதாகவும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
H Vinoth who became Vijay PR Did he secretly attack Sivakarthikeyan