வீடியோ போட்டு தனக்கு தானே சூனியம் வச்சுக்கிட்ட பிக்பாஸ் அர்ச்சனா! அபராதம் விதிப்பு!
Bigg Boss Archana who posted a video of herself casting a spell was fined
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் வனத்துறை விதிகளை மீறி ஏறியதாக எழுந்த குற்றச்சாட்டில், பிக்பாஸ் சீசன் 7 வெற்றியாளரும் சின்னத்திரை நடிகையுமான அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் அவரது காதலர் அருண் ஆகியோருக்கு வனத்துறை அபராதம் விதித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வனத்துறை விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆன்மிகச் சிறப்புமிக்க அண்ணாமலையார் மலையில் ஏறுவதற்கு வனத்துறை நிரந்தரத் தடை விதித்துள்ளது. பொதுமக்கள் பௌர்ணமி தினங்களில் மட்டும் 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் மலையின் உச்சிக்குச் செல்லவும், வனப்பகுதிக்குள் அனுமதி இன்றி நுழையவும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் அர்ச்சனா ரவிச்சந்திரன் தனது காதலருடன் அனுமதி பெறாமல் அண்ணாமலையார் மலையின் உச்சிவரை ஏறி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து, மலையேற்றத்தின் போது ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் இருள் சூழ்ந்ததால் ஏற்பட்ட அச்சம் குறித்து பதிவிட்டிருந்தார். மேலும், “மலையேற்றம் செய்பவர்கள் சூரியன் மறைவதற்கு முன்பே இறங்க திட்டமிட வேண்டும்” என்று அவர் அறிவுறுத்தியிருந்தது, பிறரையும் மலையேற ஊக்குவிப்பதாக விமர்சிக்கப்பட்டது.
இந்த பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, வனத்துறை விதிகளை மீறியதாக அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் அருண் மீது புகார் எழுந்தது. சர்ச்சை தீவிரமடைந்ததும், அவர் பகிர்ந்திருந்த மலையேற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உடனடியாக நீக்கினார்.
இதையடுத்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது இருவரும் அனுமதி இன்றி மலையேறியதை ஒப்புக் கொண்டதுடன், இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து, வனத்துறை விதிகளை மீறியதற்காக இருவருக்கும் தலா ரூ.5,000 அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பியுள்ளது.
இந்த அபராத விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், வனப்பகுதிகளில் விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
English Summary
Bigg Boss Archana who posted a video of herself casting a spell was fined