‘BRO CODE’ படத்துக்கு தடை – பெயரை மாற்றியதில் இருந்தே ரவி மோகனுக்கு எதுவுமே சரியில்லையே பாஸ்.. புதுசா வந்த பெரிய சிக்கல்!
Ban on the film BRO CODE Nothing has gone right for Ravi Mohan since the name change A new big problem has arisen
சந்தானத்தை வைத்து ‘டிக்கிலோனா’ என்ற காமெடி டைம் டிராவல் படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில், நடிகர் ரவி மோகன் நடித்து வரும் ‘BRO CODE’ திரைப்படம் திடீரென சட்ட சிக்கலில் சிக்கியுள்ளது.
ரவி மோகன் தற்போது ‘பராசக்தி’ மற்றும் ‘கராத்தே பாபு’ படங்களில் நடித்துவருகிறார். இதற்கிடையில் அவர் தொடங்கிய ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில், கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் இந்த ‘BRO CODE’ படத்தில் எஸ்.ஜே. சூர்யா, ஷரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ‘BRO CODE’ என்ற பெயரில் மதுபானம் தயாரித்து வரும் இண்டோ ஸ்பிரிட் பிவரேஜஸ் நிறுவனம், அந்த பெயருக்கான பதிப்புரிமை தங்களிடம் இருப்பதாக கூறி, படத்திற்குப் பெயரைப் பயன்படுத்தக்கூடாது என ரவி மோகன் ஸ்டூடியோஸுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், பிரபலமான ஒரு வணிகப் பெயரை திரைப்படத்தில் பயன்படுத்துவது வர்த்தக முத்திரை விதிமீறல் என நிறுவனம் வாதிட்டது. இதனால் நுகர்வோர் மத்தியில் குழப்பம் ஏற்படக்கூடும் என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டது.
இதனைத் தொடர்ந்து, ‘BRO CODE’ என்ற தலைப்பைப் பயன்படுத்தி திரைப்படத்தை விளம்பரம் செய்வதற்கும் வெளியிடுவதற்கும் இடைக்காலத் தடை விதித்து, ரவி மோகன் ஸ்டூடியோஸிடம் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. வழக்கு டிசம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா நடித்த ‘லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்துக்கும், LIC என்ற பெயரைப் பயன்படுத்தக்கூடாது என வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்தப் படத்தின் பெயர் ‘LIK’ என மாற்றப்பட்டது. அதேபோல், ரவி மோகனின் ‘BRO CODE’ படத்துக்கும் புதிய தலைப்பு மாற்றம் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Ban on the film BRO CODE Nothing has gone right for Ravi Mohan since the name change A new big problem has arisen