ஹீரோ விடா VX2 Go FB அறிமுகம்... 128 கி.மீ ரேஞ்ச், ஃபிக்ஸ்டு பேட்டரியுடன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
Hero Vida VX2 Go FB launched New electric scooter with 128 km range and fixed battery
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப், தனது மின்சார வாகன பிராண்டான விடா (Vida) வரிசையில் புதிய VX2 Go FB எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள VX2 Go மாடலுடன் இணைந்து விற்பனை செய்யப்படும் இந்த புதிய மாடல், வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு தேர்வை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய VX2 Go FB-யின் முக்கிய சிறப்பம்சம், இதில் பொருத்தப்பட்டுள்ள 3.1 kWh திறன் கொண்ட ஃபிக்ஸ்டு (நிலையான) பேட்டரி ஆகும். VX2 Go மாடலில் உள்ளதைப் போல பேட்டரியை கழற்றி தனியாக சார்ஜ் செய்ய முடியாது. மாறாக, ஸ்கூட்டரையே நேரடியாக சார்ஜிங் பாயிண்டுடன் இணைத்து சார்ஜ் செய்யும் வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தங்களது பயன்பாடு மற்றும் சார்ஜிங் வசதிக்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் பொருத்தமான மாடலைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள 6 kW மின்சார மோட்டார், அதிகபட்சமாக மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தை வழங்குகிறது. 3.1 kWh பேட்டரியுடன், IDC தரநிலையின்படி ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 128 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், DC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளதால், பேட்டரியை 0 முதல் 80 சதவீதம் வரை வெறும் 65 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும். இதனால் தினசரி பயன்பாட்டிற்கு வேகமான சார்ஜிங் அனுபவத்தை இந்த மாடல் வழங்குகிறது.
வசதிகளைப் பொறுத்தவரை, 4.3 இன்ச் LCD டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், 27.2 லிட்டர் கொள்ளளவு கொண்ட இருக்கைக்கு அடிப்பகுதி சேமிப்பு வசதி மற்றும் ஒற்றை இருக்கை உள்ளிட்ட பல நவீன அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
விடா VX வரிசை தற்போது 2.2 kWh முதல் 4.4 kWh வரை நான்கு பேட்டரி விருப்பங்களில் கிடைக்கிறது. இதில் சிறிய பேட்டரி மாடல் 93 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் வழங்கும் நிலையில், பெரிய 4.4 kWh பேட்டரி மாடல் அதிகபட்சமாக 187 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய Vida VX2 Go FB எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.13 லட்சம் (புதுடெல்லி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிலையான மற்றும் அகற்றக்கூடிய பேட்டரி ஆகிய இரு வகை விருப்பங்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் மூலம், மின்சார இருசக்கர வாகன சந்தையில் தனது இடத்தை மேலும் வலுப்படுத்த ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.
English Summary
Hero Vida VX2 Go FB launched New electric scooter with 128 km range and fixed battery