ஜி.எஸ்.டி. குறைப்பால் வாகன விற்பனையில் இந்தியா வரலாற்றுச் சாதனை – அக்டோபர் மாதத்தில் மட்டும் 40 லட்சம் வாகனங்கள் விற்பனை!
GST reduction creates historic record in vehicle sales in India 4 million vehicles sold in October alone
நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களை குறிவைத்து மத்திய அரசு அறிவித்த ஜி.எஸ்.டி. குறைப்பு வாகனத் துறைக்கு பெரும் பலனாகியுள்ளது. இதன் தாக்கமாக கடந்த அக்டோபர் மாதம் மட்டும் இந்தியாவில் 31.50 லட்சம் இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
வாகன விற்பனை தொடர்ந்து ஏற்றமடைந்துள்ளதால் உற்பத்தியாளர்களும், டீலர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரமாக விளங்கும் சென்னை, வாகன உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக உள்ளது. ஜி.எஸ்.டி. குறைப்பும் பண்டிகை கால தள்ளுபடியும் சேர்ந்ததால், வாகன விற்பனை அக்டோபர் மாதத்தில் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது.
ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) வெளியிட்ட அறிக்கையின் படி, அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் மொத்தம் 40 லட்சத்து 23 ஆயிரத்து 923 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதில்,
இருசக்கர வாகனங்கள் – 31,49,846
ஆட்டோ ரிக்ஷாக்கள் – 1,29,517
தனிநபர் பயன்பாட்டு கார்கள் – 5,57,373
டிராக்டர்கள் – 73,577
வணிக பயன்பாட்டு வாகனங்கள் – 1,07,841
மொத்தம் 40 லட்சம் வாகனங்களை கடந்த இந்த எண்ணிக்கை, இந்திய வாகனத் துறையில் இதுவரை இல்லாத வரலாற்றுச் சாதனை என குறிப்பிடப்படுகிறது.
செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் 18.27 லட்சம் வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால், அக்டோபரில் அது 120% அதிகரித்துள்ளது.
குறிப்பாக, இருசக்கர வாகன பதிவு செப்டம்பரில் 12.87 லட்சமாக இருந்தது.அது அக்டோபரில் 31.49 லட்சமாக உயர்ந்துள்ளது — இது 144.6% உயர்வை குறிக்கிறது.
அதேபோல், தனிநபர் கார்கள் செப்டம்பரில் 2.99 லட்சமாக இருந்தது; அக்டோபரில் 5.57 லட்சமாக உயர்ந்துள்ளது.வணிக வாகனங்களும் 72,124 இலிருந்து 1.07 லட்சமாக உயர்ந்துள்ளன.
செப்டம்பர் 22 முதல் அக்டோபர் இறுதி வரை நடந்த நவராத்திரி – தீபாவளி பண்டிகை 42 நாட்களில்,மொத்தம் 52,38,401 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டதாக FADA அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.முந்தைய ஆண்டு இதே காலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் 43.25 லட்சம் மட்டுமே.இதனால், நடப்பாண்டு 21.1% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் சி.எஸ். விக்னேஷ்வர் கூறியதாவது:“ஜி.எஸ்.டி.மறுசீரமைப்பால் ஏற்பட்ட வரி குறைப்பு, பண்டிகை கால தேவை,மற்றும் கிராமப்புற மக்களின் வாங்கும் திறன் ஆகியவை ஒன்றாக இணைந்ததால்,இந்திய வாகனத் துறை வரலாற்றில் அக்டோபர் மாதம் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.ஒரே மாதத்தில் 30 லட்சத்தைத் தாண்டிய இருசக்கர வாகன பதிவு இதுவே முதல் முறை.”
அவர் மேலும் தெரிவித்தார்:“புதிய மாடல்களின் அறிமுகம், நிலையான எரிபொருள் விலை,மற்றும் நல்ல நிதி சூழல் ஆகியவை வாகனத் துறையின்வளர்ச்சியை தொடர்ந்து ஊக்குவிக்கும்,”என்று கூறினார்.
பண்டிகை கால தள்ளுபடிகள், ஜி.எஸ்.டி. குறைப்பு, கிராமப்புற தேவை —இந்த மூன்றும் சேர்ந்தே இந்திய வாகனத் துறையில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளன.அக்டோபர் மாத விற்பனை புள்ளிவிவரங்கள் காட்டும் படி,
2025–26 நிதியாண்டு இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு பொற்காலமாக மாறும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
English Summary
GST reduction creates historic record in vehicle sales in India 4 million vehicles sold in October alone