தங்கம்–வெள்ளி விலையில் ஏற்ற இறக்கம்: தங்கத்தை வைத்து ஆட்டம் காட்டும் சீனா! தங்கம் விலை பாதிக்க காரணம் என்ன தெரியுமா?
Fluctuations in gold and silver prices China is playing with gold Do you know what is affecting the price of gold
சமீப நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கணிசமான ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு வரலாற்று உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை, திடீரென ஒரே நாளில் கடுமையாக சரிந்தது. பொதுவாக பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம், தற்போது ஏன் இவ்வாறு மாற்றம் காண்கிறது என்பது முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது.
பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை உருவானால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துகளாக தங்கத்தை நாடுவது வழக்கம். அமெரிக்காவில் சமீபத்தில் வெளியான சில்லறை விற்பனை தரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், அந்த நாட்டின் பொருளாதாரம் மந்தமடையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக தங்கத்திற்கு தேவை அதிகரித்தது.
மேலும், அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் மற்றும் அரசுப் பத்திரங்களின் வருமானம் குறையும் போது, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய முனைகிறார்கள். வங்கிகளில் கிடைக்கும் வட்டி குறைந்தால், தங்கத்தில் முதலீடு செய்வது பலருக்கு ஈர்ப்பாக மாறுகிறது.
தற்போதைய விலை மாற்றங்களுக்கு சீனாவும் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அந்நாட்டில் நிலத்துறை மதிப்பு சரிவு மற்றும் வங்கிகளில் குறைந்த வட்டி விகிதம் காரணமாக மக்கள் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். வெறும் நகை வாங்குவதற்காக மட்டுமல்லாமல், விலை மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பில் ஊக வணிகத்திலும் ஈடுபடுகின்றனர். இதுவே திடீர் விலை மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது.
சமீபத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,594 டாலர் என்ற உச்சத்தைத் தொட்ட நிலையில், அடுத்த நாளே சுமார் 10 சதவீதம் வரை சரிந்தது. இது சந்தையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விலை எதிர்காலத்தில் எவ்வாறு நகரும் என்பது குறித்து நிபுணர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. சிலர், கடன் வாங்கி முதலீடு செய்தவர்கள் ஒரே நேரத்தில் விற்பனை செய்தால் விலை மேலும் சரிவடையலாம் என எச்சரிக்கின்றனர். மறுபுறம், சீன மத்திய வங்கி தங்க கையிருப்பை அதிகரித்து வருவது நீண்டகாலத்தில் விலைக்கு ஆதரவாக அமையலாம் என கூறப்படுகிறது.
பிப்ரவரி 14 நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,560 மற்றும் ஒரு சவரன் ரூ.1,16,480 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் சுமார் ரூ.280 ஆக உள்ளது.
அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள், வட்டி விகித முடிவுகள் மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளே தங்கம்–வெள்ளி விலையின் அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன.
English Summary
Fluctuations in gold and silver prices China is playing with gold Do you know what is affecting the price of gold