140 கோடி இந்தியர்களும் எங்க கூடத்தான் இருக்காங்க...! - அமெரிக்காவுக்கு நேதன்யாகு அதிரடி பதிலடி...!
Where 140 crore Indians Netanyahu sharp response America
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கடந்த மாதம் வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து, இந்தியா இஸ்ரேலுக்கு வலுவான ஆதரவை வழங்கும் முக்கியமான நாடுகளில் ஒன்றாக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜே.டி. வான்ஸ், "நான் இஸ்ரேல் அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தால், உலகில் அந்த நாட்டின் மிக முக்கியமான சக்திவாய்ந்த கூட்டாளியை விமர்சிக்கும் வகையில் ஒருபோதும் பேச மாட்டேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

லெபனான் மீதான தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல், அமெரிக்காவை விமர்சித்த பின்னணியிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், அண்மையில் பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய நேதன்யாகு, ஜே.டி. வான்ஸை தனிப்பட்ட முறையில் மதிப்பதாகவும், அவருடன் நல்ல நட்புறவு இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேவேளையில், அந்த நட்புறவு காரணமாக அவர் தெரிவிக்கும் ஒவ்வொரு கருத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், இஸ்ரேலுக்கு மிக நெருக்கமான நண்பராக இருந்தவர் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என்றார்.அதோடு, அமெரிக்காவைத் தவிர இஸ்ரேலுக்கு பல்வேறு நாடுகளிலும் உறுதியான நண்பர்கள் இருப்பதாகக் கூறிய நேதன்யாகு, குறிப்பாக இந்தியாவைச் சுட்டிக்காட்டினார்.
சுமார் 140 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் இஸ்ரேலுக்கு பரந்த அளவில் ஆதரவு இருப்பதாகவும், சமூக வலைதளங்களில், குறிப்பாக தாம் பயன்படுத்தும் பேஸ்புக்கில் இந்தியர்களிடமிருந்து ஏராளமான ஆதரவு கருத்துகள் தொடர்ந்து கிடைத்து வருவதாகவும் தெரிவித்தார்.சர்வதேச அரங்கில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், உலகின் பல நாடுகள் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாகவும், பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தம்மை நேரடியாக தொடர்புகொண்டு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாகவும் நேதன்யாகு கூறியுள்ளார்.
இதற்கிடையில், நேட்டோ மாநாட்டில் பங்கேற்க துருக்கி சென்றுள்ள டொனால்டு டிரம்ப் நாடு திரும்பிய பிறகு அவரை நேரில் சந்திக்க நேதன்யாகு நேரம் கோரியுள்ளதாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய காசா மோதலுக்குப் பிறகு, அப்பகுதியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும், அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும்பான்மையாக இருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், கடந்த ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பின்னரும் காசா மீது தாக்குதல்கள் தொடர்வதாகவும், அத்தியாவசிய உணவு, மருந்து மற்றும் நிவாரணப் பொருட்கள் சென்றடைவதில் கடுமையான தடைகள் நிலவுவதாகவும் ஐநா அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.
இதனால் மனிதாபிமான நெருக்கடி தீவிரமடைந்துள்ளதாகவும், இதுதொடர்பாக சர்வதேச அளவில் பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சூழலில், இந்தியா இஸ்ரேலின் முக்கியமான நண்பர்களில் ஒன்றாகவும், தொடர்ந்து ஆதரவு வழங்கும் நாடாகவும் நேதன்யாகு வெளிப்படையாக குறிப்பிட்டிருப்பது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
English Summary
Where 140 crore Indians Netanyahu sharp response America