16 துறைகளில் ‘கட்சி நிதி’ வசூலா? முழு பட்டியலை கேட்ட முதல்வர் விஜய்! திமுக அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்!
Party fund collection across 16 sectors Vijay demands the full list Vijay shakes the foundations of the DMK
தமிழக சட்டமன்றத்தில் ‘கட்சி நிதி’ தொடர்பாக முதல்வர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டு ஏற்கனவே பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிடாமல் அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆட்சிக் காலத்தில் எந்தெந்த துறைகளில் கட்சி நிதி வசூலிக்கப்பட்டது, எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது, யார் யார் பணம் கொடுத்தனர், அந்த நிதி யாரிடம் சென்றது என்பது தொடர்பான முழுமையான விவரங்களை சேகரிக்க முதல்வர் விஜய் தனது செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கோட்டை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் விஜய், எதிர்க்கட்சிகளையும் முந்தைய ஆட்சியாளர்களையும் கடுமையாக விமர்சித்திருந்தார். “எதிர்த்துப் பேசினால்தான் தாங்கள் எதிர்க்கட்சி என்பதை நிரூபிக்க முடியும் என்று நினைத்துச் செயல்படும் எதிர்க்கட்சியினருக்கு என் முதற்கண் நன்றி. தவெகவைத் தேர்ந்தெடுத்து அரியணையில் அமரவைத்த தமிழக மக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தனது உரையை தொடங்கியிருந்தார்.
மேலும், தான் திடீரென சினிமாவில் இருந்து நேராக அரசியலுக்கு வந்து முதலமைச்சராகிவிட்டது போன்ற பிம்பத்தை சிலர் உருவாக்க முயற்சிப்பதாகவும் விஜய் விமர்சித்தார். “சிலர் நான் ஏதோ ஷூட்டிங்கில் இருந்து நேராக சட்டசபைக்கு வந்து முதலமைச்சர் ஆனது போல ஒரு பிம்பத்தை உருவாக்க முயல்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். இது வெறும் ரீல் கிடையாது, ரியல்” என்று அவர் காட்டமாக பேசியிருந்தார்.
சினிமாவில் அரசியல் கருத்துகளை பேசியதற்காக தனது திரைப்படங்கள் பல்வேறு நெருக்கடிகளையும் சிக்கல்களையும் சந்தித்ததாகவும், அது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும் என்றும் விஜய் குறிப்பிட்டிருந்தார். நடிகராக வாழ்க்கையை தொடங்கியிருந்தாலும் பல்வேறு நிலைகளை கடந்து மக்களின் இதயங்களில் இடம்பிடித்த பிறகே தற்போதைய நிலைக்கு வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
1990களில் ரசிகர் மன்றமாக செயல்பட்ட காலத்திலேயே தனது இயக்கம் மக்களுக்கு துணையாக இருந்ததாக கூறிய விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணம் திடீரென தொடங்கியது அல்ல என்றும் சட்டமன்றத்தில் விளக்கம் அளித்திருந்தார்.
அப்போது ‘கட்சி நிதி’ விவகாரத்தையும் விஜய் கையில் எடுத்தார். “கட்சி நிதி என்று கூறி நாங்கள் கொள்ளையடிப்பது இல்லை” என்று பேசிய அவர், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மறைமுகமாக கடுமையாக தாக்கியிருந்தார்.
“ஒரே குடும்பம் மட்டுமே முக்கியம் என்பது எங்கள் கொள்கை அல்ல. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் முக்கியம் என்பதை சொல்லும் ஆட்சிதான் இந்த தவெக ஆட்சி. காசு கொடுத்து வாக்கு வாங்கும் நச்சு கலாச்சாரத்திற்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்” என்றும் விஜய் பேசியிருந்தார்.
தனது அரசின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் அரசியலுக்கு புதியவர்கள் என்று குறிப்பிட்ட அவர், “எங்களுக்கு மக்கள் சேவை செய்ய மட்டும்தான் தெரியுமே தவிர, மக்கள் பணத்தை சுருட்டத் தெரியாது. கோயில் பணத்தையோ, கனிம வளங்களையோ கொள்ளையடிக்க எங்களுக்குத் தெரியாது” என்றும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மேலும், தவெக அரசுக்கு எதிராக எதிர்பாராத நபர்கள் கூட தற்போது ஒன்றிணைந்து வருவதாகவும் விஜய் குற்றம்சாட்டியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பும் செய்தனர்.
அன்றைய தினம் தொடங்கிய ‘கட்சி நிதி’ தொடர்பான அரசியல் மோதல் இதுவரை முடிவுக்கு வரவில்லை. இந்த விவகாரத்தை பெரிய அளவில் கொண்டு செல்ல முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆட்சிக் காலத்தில் அரசு துறைகளில் கட்சி நிதி என்ற பெயரில் பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முழுமையான தகவல்களை சேகரிக்க தனது செயலாளர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து முதல்வரின் செயலாளர்கள் பல்வேறு துறைகள் தொடர்பான தகவல்களை தீவிரமாக சேகரித்து வருவதாகவும், இந்த நடவடிக்கை கோட்டை அதிகாரிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோட்டை வட்டாரங்களில் பேசப்படும் தகவல்களின்படி, “திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளது. அதேபோல் பல துறைகளில் கட்சி நிதி வசூலிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த துறைகளில் இந்த நிதி வசூலிக்கப்பட்டது? எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது? யார் யார் இந்த நிதியை கொடுத்தனர்? அந்த பணம் யாரிடம் கொடுக்கப்பட்டது? என்பது உள்ளிட்ட முழுமையான விவரங்கள் வேண்டும்” என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டமன்றத்தில் கட்சி நிதி குறித்து முதல்வர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் கடுமையாக பதிலளித்த நிலையில், அதற்கான ஆதாரங்களுடன் பதில் அளிக்க வேண்டும் என்பதே விஜய்யின் திட்டமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
“கட்சி நிதியை எந்த கட்சி வசூலித்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஆவேசமாக கேட்டார் அல்லவா? அதற்கு பதில் சொல்ல வேண்டும். வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கட்சி நிதி வசூல் தொடர்பான விவகாரங்களை அம்பலப்படுத்த வேண்டும். அதற்காக முழுமையான விவரங்களை சேகரித்து அறிக்கை அளிக்க வேண்டும்” என்று முதல்வர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன.
முதற்கட்ட தகவல் சேகரிப்பில் சுமார் 16 அரசு துறைகளில் ‘கட்சி நிதி’ தொடர்பான விவகாரங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளதாகவும், அந்த துறைகளின் பட்டியலை முதல்வரின் செயலாளர்கள் தயாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த 16 துறைகள் எவை, எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, அதற்கான ஆவணங்கள் அல்லது ஆதாரங்கள் என்ன, இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது போன்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், முழுமையான அறிக்கை தயாரிக்கப்பட்ட பிறகு இந்த விவகாரம் சட்டமன்றத்தில் முன்வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த மாதம் தொடங்கவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் ‘கட்சி நிதி’ விவகாரத்தை மீண்டும் எழுப்ப முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், அப்போது ஆதாரங்களுடன் சில முக்கிய தகவல்கள் வெளியிடப்படலாம் என்றும் கோட்டை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஏற்கனவே சட்டமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய்க்கும் திமுகவுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது 16 துறைகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்தி தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் என்ன ஆதாரங்களை வெளியிடப் போகிறார், ‘கட்சி நிதி’ தொடர்பாக எந்தெந்த துறைகளின் பெயர்கள் வெளிவரும், அதற்கு திமுக என்ன பதில் அளிக்கப் போகிறது என்பதுதான் தற்போது கோட்டை மற்றும் அறிவாலய வட்டாரங்களில் எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.
English Summary
Party fund collection across 16 sectors Vijay demands the full list Vijay shakes the foundations of the DMK