தவிடு பொடியான நோபல் கனவு: ட்ரம்பை நிராகரிக்க காரணம் என்ன ..?
What is the reason for rejecting Trump for the Nobel Peace Prize
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அமைதிக்கான நோபல் பரிசு கனவு நொறுக்கிக்கியுள்ளது. இது டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாக உலகளவில் பேசப்பட்ட மற்றும் அதிகம் கவனம் பெற்ற விஷயங்களில் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்குமா என்பதும் ஒன்று.
அவர் 07 போர்களை நிறுத்தியதற்காக, இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு தான் வழங்க வேண்டும் என்று வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டு வந்தார். மேலும், நோபல் பரிசு வழங்காவிட்டால், அது அமெரிக்காவை இழிவுபடுத்தும் செயல் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படும் காலத்திற்குப் பிறகே, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதாவது, பிப்ரவரி 01-ஆம் தேதிக்கு முன்பாக, நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அதிபர் டிரம்ப்பின் பெயரை பிப்ரவரி 01க்குப் பிறகு பரிந்துரை செய்துள்ளன. இதுவே அவருக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போனதற்கான காரணம் என கூறப்படுகிறது.
இது குறித்து நார்வேவைச் சேர்ந்த நோபல் பரிசு தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள ஜோர்கன் வாட்னே பிரிட்னெஸ் கூறியுள்ளதாவது: 'நோபல் பரிசு தேர்வு கமிட்டி, அனைத்து வகையான பிரசாரங்கள், ஊடக கவனத்தையும் பார்த்துள்ளது. அமைதிக்கு வழிவகுக்கும் காரணிகள் குறித்து ஆயிரக்கணக்கான கடிதங்களை ஆண்டுதோறும் பெறுகிறோம். நாங்கள் அமர்ந்திருக்கும் அறை தைரியம் மற்றும் நேர்மையால் நிரம்பியுள்ளது. எங்களின் முடிவை ஆல்பிரட் நோபலின் (நோபல் பரிசை அறிமுகப்படுத்தியவர்) செயல் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கிறோம்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஹென்றி ஜாக்சன் சொசைட்டியின் வரலாற்று ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர் தியோ ஜெனூ இது குறித்து குறிப்பிடுகையில், 'அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிகள் நீண்ட காலமாக நிலைக்குமா..? என்று நிரூபிக்கப்படவில்லை. குறுகிய காலத்தில் சண்டையை நிறுத்துவதற்கும், மோதலின் அடிப்படை காரணங்களை தீர்ப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது,' என்று கூறியுள்ளார்.
English Summary
What is the reason for rejecting Trump for the Nobel Peace Prize