அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக 44 ஆண்டு சிறை... இந்திய வம்சாவளி சுப்பிரமணியத்தின் சோக கதை!
USA Life imprisonment deportation illegal immigration case
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரை கொலை செய்ததாக 1980ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த நேரடி சாட்சியமும் இல்லாத நிலையில், சந்தர்ப்பச் சூழ்நிலைகள் அடிப்படையில் அவர் குற்றவாளி என இரண்டு முறை தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால், 43 ஆண்டுகள் கழித்து புதிதாக சமர்ப்பிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஆதாரங்கள், அவர் குற்றமற்றவர் என்பதைக் காட்டின. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் நீதிமன்றம் புதிய தீர்ப்பை வழங்கி, சுப்பிரமணியத்தை விடுவிக்க உத்தரவிட்டது.
விடுதலையான அவரை கடந்த மாதம் மீண்டும் கைது செய்தனர். காரணம் — அவர் 20 வயதில் போதைப்பொருள் விநியோகக் குற்றச்சாட்டில் சிக்கியிருந்த பழைய வழக்கு. அதைக் காரணம் காட்டி, குடியேற்ற அதிகாரிகள் அக்டோபர் 3ஆம் தேதி அவரை தடுப்புக் காவலில் வைத்தனர்.
இந்த நிலையில், அமெரிக்காவில் நாடுகடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி, சுப்பிரமணியத்தை தற்காலிகமாக நாடுகடத்த வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார். குடியேற்ற மேல்முறையீட்டு வாரியம், வழக்கை மறுபரிசீலனை செய்யலாமா என்பதை முடிவு செய்யும் வரை அவர் பாதுகாப்பில் இருப்பார்.
சுப்பிரமணியம் ஒன்பது மாதக் குழந்தையாக இருந்தபோது பெற்றோருடன் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அவருக்கு நிரந்தர அமெரிக்க குடியுரிமை இருந்தபோதிலும், டிரம்ப் நிர்வாகத்திலிருந்து தொடங்கிய கடுமையான குடியேற்ற நடவடிக்கைகள் காரணமாக இப்போது அவர் நாடுகடத்தல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
பல குடியேற்ற உரிமை அமைப்புகள், “அவர் குற்றமற்றவர் என்பதை நீதிமன்றமே உறுதி செய்துள்ளது; எனவே நாடுகடத்தல் முறையினை நிறுத்த வேண்டும்” எனக் கோரியுள்ளன.
English Summary
USA Life imprisonment deportation illegal immigration case