5.5 கோடி பேரின் விசாக்களை மறுபரிசீலனை செய்யும் அமெரிக்கா! சுமார் 50 லட்சம் இந்தியர்களின் நிலை என்ன ஆகும்?!
US Visa Verification trump India
அமெரிக்காவில் தற்போது தங்கியிருக்கும் 5.5 கோடி பேரின் விசாக்களை மறுபரிசீலனை செய்ய இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் இருந்து பல்வேறு வகை விசாக்கள் பெற்று அமெரிக்காவில் வாழ்ந்து வரும் கோடிக்கணக்கானோர் இந்நடவடிக்கையின் கீழ் ஆய்வுக்கு உட்பட உள்ளனர்.
தற்போது அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 50 லட்சம் பேர், பி1/பி2 பார்வையாளர் விசா, எஃப்1 மாணவர் விசா, எச்1-பி வேலை விசா போன்ற குடியுரிமையற்ற விசாக்களை வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, நாட்டின் பாதுகாப்பையும் மக்களின் நலனையும் உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். அதன்படி, சுற்றுலா, கல்வி, தொழில்முறை மற்றும் வேலை விசா உள்ளிட்ட அனைத்தும் சீராய்வு செய்யப்படும். விசா வைத்திருப்பவர்கள் விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா, காலத்தை மீறி தங்குகிறார்களா, குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்களா, அல்லது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டுள்ளனரா என்பன பரிசீலிக்கப்பட உள்ளன.
மேலும், விசா பெற்றவர்களின் சமூக வலைதள நடவடிக்கைகள், சொந்த நாட்டின் குடியுரிமை பதிவுகள், சட்ட அமலாக்கத் துறையின் அறிக்கைகள் ஆகியவையும் ஆய்வில் சேர்க்கப்படவுள்ளன. கடந்த மாதங்களில் அறிமுகமான புதிய விதிகளின் படி, விசா நேர்காணல்களில் மின்னணு சாதனங்கள் முடக்கப்பட வேண்டும். கூடுதலாக, உள்நாட்டு வருவாய் சேவை துறையிடமிருந்து விசா பெற்றவர்களின் வரி விவரங்களையும் பெற்று, ஏதேனும் விதிமீறல்கள் உள்ளதா என சோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மறுஆய்வு நடவடிக்கையில் விதிமுறைகளை மீறியவர்கள் கண்டறியப்பட்டால், அவர்களின் விசா ரத்து செய்யப்படும் மட்டுமல்லாமல் நாடு கடத்தப்படவும் வாய்ப்புள்ளது.
English Summary
US Visa Verification trump India