போர் நடக்கிறபோதும் தங்கம் விலை ஏன் அதிகமாக உயரவில்லை? இனி அவ்வளவுதானா? ஆனந்த் சீனிவாசன்
Why hasnot the price of gold increased much even during the war Is that all Anand Srinivasan
பொதுவாக உலகில் போர் அல்லது பொருளாதார அசாதாரண சூழ்நிலைகள் உருவாகும்போது தங்கத்தின் விலை திடீரென உயருவது வழக்கம். பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை மக்கள் தேர்வு செய்வதால் அதன் தேவை அதிகரித்து விலை உயர்ந்துவிடும்.
ஆனால் இந்த முறை மத்திய கிழக்கு பகுதியில் மோதல் தொடர்ந்தாலும் தங்கம் விலை பெரியளவில் உயரவில்லை. கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை குறைந்தே வந்தது. இதனால் சமூக வலைதளங்களில் பல்வேறு ஊகங்கள் பரவி வருகின்றன.இந்த நிலையில் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் இதற்கான காரணங்களை விளக்கியுள்ளார்.
அவர் கூறுகையில், போர் போன்ற சூழலில் தங்கம் விலை உயர்வது இயல்பானது. ஆனால் இந்த முறை ஒரு முக்கிய காரணத்தால் தங்கம் விலை அதிகமாக உயரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அதாவது தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்திருப்பதே முக்கிய காரணம் என அவர் கூறுகிறார். உலகளவில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை விட டாலரை அதிகமாக வாங்கத் தொடங்கியுள்ளனர். இதனால் டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது. டாலர் மதிப்பு உயர்ந்தால் தங்கத்தின் விலை பொதுவாக குறையவோ அல்லது நிலையாக இருக்கவோ செய்யும்.
மேலும் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு நிலை, வரி தொடர்பான பொறுப்புகள் மற்றும் போர் செலவுகள் போன்ற காரணங்களால் அரசுக்கு கூடுதலாக 300 முதல் 350 பில்லியன் டாலர் வரை நிதி தேவையாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். இது பின்னர் பணவீக்கத்தை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில் மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியுள்ளது. இதன் தாக்கமாக வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனால் சிறு வியாபாரிகள் மற்றும் உணவகங்களுக்கு செலவு அதிகரிக்கும் சூழல் உருவாகலாம்.
தங்கம் வாங்கும் தேவை குறைந்துவிட்டதாக சிலர் கூறுவது உண்மையல்ல என்றும் அவர் விளக்கினார். தங்கத்துக்கு தேவையுண்டு; ஆனால் தற்போது முதலீட்டாளர்கள் டாலருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் தங்கம் விலை உயராமல் இருக்கிறது என்றார்.
எனினும் இந்த நிலை நீண்ட காலம் நீடிக்காது என்றும், எதிர்காலத்தில் பணவீக்கம் அதிகரிக்கும் போது தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்பு உள்ளது என்றும் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார்.
English Summary
Why hasnot the price of gold increased much even during the war Is that all Anand Srinivasan