திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு? உதயநிதிக்கு ஓகே சொன்ன ஸ்டாலின்! உடையும் ‘மாஜிகள்’ கோட்டை! பரபரக்கும் அறிவாலயம்! - Seithipunal
Seithipunal


2026 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டிருந்த மு.க.ஸ்டாலின், தற்போது அந்த நடவடிக்கைகளை வேகப்படுத்த முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் திட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

2026 தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்தபோதும் திமுக சந்தித்த பின்னடைவு அக்கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினே தேர்தலில் தோல்வியடைந்தது திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியும் திமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

இதையடுத்து தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிவதோடு மட்டுமல்லாமல், கட்சியின் அடிமட்ட கட்டமைப்பையும் வலுப்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக 36 பேர் கொண்ட கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.

இந்த ஆய்வின் அடிப்படையில், தற்போதுள்ள 78 மாவட்டச் செயலாளர் பதவிகளை சுமார் 100 ஆக உயர்த்தும் திட்டம் மீண்டும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுகவில் தற்போது சில மாவட்டச் செயலாளர்களின் கட்டுப்பாட்டில் நான்கு முதல் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகள் வரை உள்ளன. இதனால் அடிமட்ட அளவில் கட்சிப் பணிகளை கண்காணிப்பதிலும், நிர்வாகிகளை ஒருங்கிணைப்பதிலும் சிக்கல்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை சரிசெய்யும் வகையில் பெரிய மாவட்டங்களை இரண்டாக அல்லது மூன்றாக பிரித்து புதிய அமைப்பு மாவட்டங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டச் செயலாளரின் கட்டுப்பாட்டிலும் அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் மட்டுமே இருக்கும் வகையில் கட்சி அமைப்பை மாற்றியமைக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், பல ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர் பதவிக்காக காத்திருக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக இளைஞரணியில் செயல்பட்டு வரும் இளம் நிர்வாகிகளுக்கும் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த மறுசீரமைப்பு திட்டத்தில் உதயநிதி ஸ்டாலினின் பங்கு முக்கியமாக இருப்பதாகவும் திமுகவினர் மத்தியில் பேசப்படுகிறது. இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், கட்சியின் எதிர்கால தலைமுறையை இப்போதே உருவாக்க வேண்டும் என்றும் உதயநிதி தனது தந்தையிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், திமுகவில் நிலவும் அதிருப்தி காரணமாக சில நிர்வாகிகள் தவெக உள்ளிட்ட மாற்று அரசியல் தளங்களை நோக்கி நகர்ந்து வருவதால், கட்சிக்குள் புதிய வாய்ப்புகளை உருவாக்குவது அவசியம் என தலைமை கருதுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் உள்ளிட்ட காரணங்களால் தாமதமானதாக கூறப்படும் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தற்போது மீண்டும் வேகம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது புதியவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தினாலும், பல ஆண்டுகளாக நான்கு அல்லது ஐந்து தொகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மூத்த நிர்வாகிகளுக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சமும் திமுக தலைமையிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், புதிய மாவட்டங்களை உருவாக்குவதுடன், பதவி மற்றும் அதிகாரம் குறைக்கப்படும் மூத்த நிர்வாகிகளுக்கு மாற்றுப் பொறுப்புகளை வழங்கி அவர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெற உள்ள திமுக செயற்குழுக் கூட்டத்தில் இந்த மறுசீரமைப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் அதிகரித்துள்ளது.

திமுகவின் பழைய அதிகார மையங்களை மாற்றி, இளைஞர்களுக்கு அதிக இடம் கொடுக்கும் இந்த மறுசீரமைப்பு உண்மையாகவே நடைமுறைக்கு வந்தால், தேர்தல் தோல்விக்குப் பிறகு அக்கட்சியில் உருவாகும் மிகப்பெரிய அமைப்பு மாற்றமாக இது அமையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Major restructuring in the DMK Stalin gives the nod to Udhayanidhi The strongholds of former ministers set to crumble A buzz of activity at Arivalayam


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?




Seithipunal
--> -->