“டெல்லியில் பதவி தரோம்னு சொன்னார் அமித் ஷா; நான் மறுத்துவிட்டேன்” !உண்மையை உடைத்த அண்ணாமலை!
Amit Shah offered me a position in Delhi I declined Annamalai reveals the truth
அண்ணாமலை பாஜகவின் ‘பி டீம்’ என பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வரும் நிலையில், இந்த விமர்சனங்களுக்கு அவரே விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில் பேசிய அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்னை டெல்லியில் பொறுப்பேற்று பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் தமிழகத்திலேயே இருந்து மக்களுக்காக அரசியல் செய்ய விரும்பியதால் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பாஜக தமிழக தலைவராக இருந்த அண்ணாமலை, தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னரும் கட்சியில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். இதற்கிடையே கட்சித் தலைமையுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, ‘வீ த லீடர்ஸ்’ (We The Leaders) என்ற புதிய அமைப்பை தொடங்கினார்.
இந்த அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பல்வேறு பகுதிகளில் மாநாடுகள் மற்றும் பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாநாடு நடைபெற்ற நிலையில், தற்போது சென்னையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, தன்னை பாஜகவின் ‘பி டீம்’ என்று விமர்சிப்பது தொடர்பாகவும் விளக்கம் அளித்தார்.
அவர் கூறுகையில், “நான் அமித் ஷாவை சந்தித்து பேசியதால் என்னை பாஜகவின் பி டீம் என்கிறார்கள். டெல்லியில் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் அங்கேயே இருக்குமாறு அமித் ஷா என்னிடம் கூறினார். ஆனால் நான் அதை ஏற்கவில்லை. தமிழகத்திலேயே இருந்து மக்களுக்கு சேவை செய்து அரசியல் செய்ய வேண்டும் என்று அவரிடம் தெளிவாக கூறிவிட்டேன்” என்றார்.
மேலும், ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு தொடங்கப்பட்டு 73 நாட்களில் 20 லட்சம் பேர் இணைந்துள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். இது மக்களுக்கான இயக்கம் என்றும், இதில் மக்கள் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
“டெல்லி, ஜார்ஜ் கோட்டை, பனையூர், போயஸ் கார்டன் ஆகிய இடங்களில் இருந்து முடிவெடுக்கும் காலம் முடிந்துவிட்டது. மக்கள் தங்களுக்கான முடிவுகளை தாங்களே எடுக்க வேண்டும்” என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
தொடர்ந்து இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்தும் அண்ணாமலை பேசினார். தற்போது இந்தியாவில் சுமார் 80 லட்சம் பேர் டெலிவரி பணியில் ஈடுபட்டு வருவதாகவும், 2030ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 2.5 கோடியாக உயரக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவர்களில் பலர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் என்றும், ஆனால் வேலைவாய்ப்பு கிடைக்காததால் டெலிவரி பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அண்ணாமலை கூறினார்.
அதேநேரத்தில், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இந்த வேலைவாய்ப்புகளுக்கும் எதிர்காலத்தில் ஆபத்து ஏற்படலாம் என அவர் எச்சரித்தார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ரோபோக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்யும் நடைமுறை தொடங்கிவிட்டதாகவும், இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவிலும் ரோபோ டெலிவரி நடைமுறைக்கு வரக்கூடும் என்றும் தெரிவித்தார்.
இதனால் இளைஞர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியது அரசின் முக்கிய பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.
“இளைஞர்களுக்காக இதுபோன்ற விஷயங்களை பேசுவதால் மத்திய அரசுக்கு எதிராக பேசுகிறோம் என்று அர்த்தம் கிடையாது. நாம் இளைஞர்களுக்காக பேசுகிறோம்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
English Summary
Amit Shah offered me a position in Delhi I declined Annamalai reveals the truth