காசா போர்: ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா: அடுத்து என்ன நடக்கும்..?
US issues ultimatum to Hamas in Israel and Hamas war
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசா போரை முடிவுக்குக் கொண்டுவர, முன்வைத்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தம், சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர், தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்நிலையில், காசாவில் இதுவரை 64,000-க்கும் மேற்பட்டோரும், இஸ்ரேல் தரப்பில் 460-க்கும் மேற்பட்ட வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
காசாமீது இஸ்ரேல் நடத்திவரும் தரைவழித் தாக்குதல்களுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. அத்துடன், பணயக்கைதிகளை மீட்பதற்கான அழுத்தமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில்,போர் நிறுத்தத்திற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு அனைத்தும் தோல்வில் முடிவடைந்துள்ள.
இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது சமூக வலைதளப் பக்கத்தில் போர் நிறுத்தம் தொடர்பாக வெளியிட்ட பதிவு, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது, தனது போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாகவும், ஹமாஸ் அமைப்பு இதனை உடனடியாக ஏற்க வேண்டும் என்றும், இதுவே தனது இறுதி எச்சரிக்கை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின்படி, போர் நிறுத்தத்தின் முதல் நாளிலேயே அனைத்துப் பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக இஸ்ரேல், பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்து, காசா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
ஆனாலும், இஸ்ரேல் தரப்பில் அதிகாரப்பூர்வமாக இந்த செய்தியை உறுதி செய்யப்படவில்லை. அத்துடன், குறித்த ஒப்பந்தம் தீவிரப் பரிசீலனையில் இருப்பதாகப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு நிபந்தனைகளுடன் கூடிய பதிலை ஹமாஸ் அளித்துள்ளது. அதாவது, போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வருவதாகவும், காசாவிலிருந்து படைகளை முழுமையாகத் திரும்பப் பெறுவதாகவும் இஸ்ரேல் உறுதியளித்தால், பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
US issues ultimatum to Hamas in Israel and Hamas war