பார்வைக் குறைபாடு உள்ளவர்கள், ராசியில் சூரியதோஷம் உள்ளவர்கள் செல்ல வேண்டிய தலம்; 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஞாயிறு தலம்..! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் சூரியனை மையமாகக் கொண்ட பஞ்ச பாஸ்கரத் தலங்களுள் ஞாயிறு-உம் ஒன்று. இந்த தலம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது என  கருதப்படுகிறது. சோழர்காலத்தில் தொண்டை நாடு 24 கோட்டங்களாகப் பிரித்து ஆளப்பட்ட போது புழல் கோட்டத்தில் ஞாயிறு தலைசிறந்த நாடாக இருந்தது என்று சோழர் கால கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

இந்த திருத்தலத்தில் இறைவன் புஷ்பரதேஸ்வரர் என்றும், இறைவி சொர்ணாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பிகை சுவாமியின் வலதுபுறத்தில் சந்நிதி கொண்டிருப்பதால், இது திருமண பாக்யம் அருளும் தலம் என்று கூறப்படுகிறது.

இந்த கோவில் வரலாறுகளின் படி, ஒரு சமயம், பிரம்ம தேவனின் சாபத்தால் நோயுற்ற சூரிய பகவான், தன் நோய் நீங்க, நீராடி சிவ பூஜை செய்வதற்காக இத்தலம் வந்தாக கூறப்படுகிறது.

அப்போது அங்குள்ள தாமரைக் குளம் அவரைப் பெரிதும் கவர்ந்ததாக கூறப்படுகிறது. அதுற்கு காரணம், இந்த குளத்தில் ஓராயிரம் இதழ் கொண்ட அழகிய தாமரைகள் பூத்திருந்தன. அதில் இறங்கி நீராடி, மானசீகமாக எம்பெருமான் சிவனை வழிபட்ட போது, அவர் தாமரை மலர் ஒன்றில் லிங்க ரூபமாக எழுந்தருளியதாக சொல்லப்படுகிறது. அப்போது லிங்கமே தோன்றிய ஈசனை  எடுத்து ஆசனத்தில் இருத்தி, வணங்கியதால், பிரம்மா தேவனின் சாபத்தால் உண்டான நோய் நீங்கப் பெற்றாராம் பகலவன்.

இதனால் இறைவன் புஷ்பத்தின் இடையே தோன்றியதால் புஷ்பரதேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனை வணங்கி நோய் நீங்கப்பெற்ற சூரிய பகவான் இங்கு சிறப்பு தெய்வமாக வழிபடப்படுகிறார்.

இங்கு பார்வைக் குறைபாடுடைய சோழ மன்னன் ஒருவனுக்கு இத்தலத்தில் தாமரையின் மேல் இறைவன் பேரொளியுடன் ஞாயிறாகத் தோன்றி, காட்சி தந்ததால், அவனுக்கு முழுப்பார்வையையும் வந்ததாகவும், அதனால் இத்தலம் "ஞாயிறு' என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இங்கு வந்த சோழ மன்னன் இப்பகுதிக்கு வந்தபோது அருகில் உள்ள ஓரிடத்தில் தங்கியதால், அந்த இடமே "சோழவரம்' என அழைக்கப்படுவதாகச் ஒரு தகவலில் சொல்லப்படுகிறது. சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் இந்த 'ஞாயிறு' அமைந்துள்ளது.

அத்தோடு, சங்கிலி நாச்சியாரோடு தொடர்புடைய தலம், ஞாயிறு. திருவொற்றியூரில் சிவனுக்கு மாலை தொடுத்துத் தந்த சங்கிலி நாச்சியாரை அங்கு வந்த சுந்தரர் கண்டு காதல் கொண்டு சிவனையே உதவிக்கு அழைக்கிறார். சிவனும் உதவிட, அவர்கள் திருமணம் நடந்தது என்ற ஒரு கதையும் இத்தலத்திற்கு உண்டு.

அதாவது, அந்தத் தெய்வப்பெண் அவதரித்தது இந்தத் தலத்தில் தான். பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் ஞாயிறு நாட்டின் பெருமைகளையும் சங்கிலியாரின் சிறப்புகளையும் கூறியுள்ளார். இந்த கோவிலில் சங்கிலி நாச்சியாருக்கும் தனி சந்நிதி உள்ளது.

கண்வ மகரிஷி இவ்வூர் அருகே ஆசிரமம் அமைத்து சிவபெருமானையும் சூரிய பகவானையும் வழிபட்டு முக்தி அடைந்ததாக புராண வரலாறு கூறுகிறது. அவருக்கும் இங்கு தனி சந்நிதி உள்ளது.

இந்த கோவிலில் தலவிருட்சம் நாகலிங்க மரம். சூரியன் வழிபட்ட தடாகம் சூரிய தீர்த்தம் எனப்படுகிறது. அகத்தியரால் அருளப்பட்ட ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை இத்தலத்தில் பாராயணம் செய்தால், அது ஆயிரம் மடங்கு பலன் தரும் என்று கூறுகிறார்கள்.

இந்த தலத்தில் மூலவர் புஷ்பரதேஸ்வரருக்கு எதிரே சூரிய பகவான் தரிசன, தருகிறார். சுவாமி, அம்பாள் சந்நிதிகளுக்கு முன்புள்ள முகமண்டபத்தை கலையம்சமுள்ள தூண்கள் உள்ளன. அதில் சூரியன், கோணர், கோணங்கி, மோகினி, ரிஷிகள், சிற்றரசர்கள், யாளி, சிவ பூஜை செய்யும் ரிஷிகள், காமாட்சி அம்மன், சிவபெருமானை வழிபடும் காட்சி, கிருஷ்ண காளிங்க நர்த்தனம் போன்ற உருவங்கள் காணப்படுகின்றன.கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கை ஆகியோரை பக்தர்கள் தரிசிக்கலாம்.

கோவில் பிரகாரத்தில் உற்சவர் கமல விநாயகர், சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், சங்கிலி நாச்சியார் ஆகியோருக்கு தனி சந்நிதிகள் உள்ளன.

ராசியில் சூரியதோஷம் உள்ளவர்களும், சூரிய தசை, சூரிய புத்தி நடக்கிறவர்களும், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள், பிணிகள், களத்திர தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து புஷ்பரதேஸ்வரரையும் சூரிய பகவானையும் வழிபட்டால் நல்லது நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. குறிப்பாக ஞாயிறு கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து வழிபாடு செய்வது கூடுதல் சிறப்போகும்.

அதிலும், சித்திரை, தை மாதப்பிறப்பு, ரதசப்தமி முதலான நாளில் இங்கு சூரியபகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. சித்திரை வருடப் பிறப்பின் போது முதல் ஏழு நாள்கள் சுவாமி, அம்பாள் மீது சூரிய கதிர்கள் விழுகிறது. இந்த ஏழு நாள்களுக்கும் சிவனுக்கான பூஜையை சூரியனை வந்து செய்வதாக ஐதீகம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A must visit place for visually impaired people on Gnayiru Temple


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->