துருக்கியின் புதிய நடவடிக்கை: இந்தியாவின் 3 நட்பு நாடுகளை குறிவைத்த எர்டோகன்.. பகீர் பின்னணி!
Turkey new move Erdogan targets 3 of India allies Awful background
துருக்கி, இந்தியாவின் நெருங்கிய நட்புநாடுகள் எனப்படும் இஸ்ரேல், கிரீஸ், சைப்ரஸ் ஆகியவற்றை அச்சுறுத்தும் வகையில் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து தயாரிக்கும் 4.5 தலைமுறை யூரோஃபைட்டர் டைபூன் போர் விமானங்களை துருக்கி வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 40 போர் விமானங்களை வாங்குவதற்கான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 5.6 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
துருக்கி தற்போது மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தம், அதன் விமானப்படையை நவீனப்படுத்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்கா மூலம் எஃப்–35 ரக விமானங்களை பெற முயற்சித்த துருக்கி, ரஷ்யாவின் எஸ்–400 பாதுகாப்பு அமைப்பை வாங்கியதால் அந்த முயற்சி தோல்வியடைந்தது. இதனையடுத்து நேட்டோ உறுப்புகள் மூலம் போர் விமானங்களை வாங்கும் திட்டத்தில் துருக்கி ஈடுபட்டுள்ளது.
இந்த புதிய ஒப்பந்தம், இந்தியாவின் மூன்று முக்கிய நெருக்கமான நாடுகளான இஸ்ரேல், கிரீஸ் மற்றும் சைப்ரஸின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. காரணம், இந்த மூன்று நாடுகளுக்கும் துருக்கியுடன் நீண்டகாலமாக நிலவும் பிரச்சனைகள் உள்ளன.
சைப்ரஸ் – துருக்கி: சைப்ரஸின் வடக்கு பகுதியை துருக்கி தற்காலிகமாக ஆக்கிரமித்து வைத்துள்ளதால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது.
கிரீஸ் – துருக்கி: ஏஜியன் கடல் மற்றும் எண்ணெய் வளங்களை மையமாகக் கொண்ட தீவுகளைப் பற்றிய உரிமை விவகாரத்தில் இந்த இரு நாடுகளும் பல ஆண்டுகளாக மோதிக் கொண்டு வருகின்றன.
இஸ்ரேல் – துருக்கி: பாலஸ்தீன விவகாரம், அரசியல் கருத்து வேறுபாடுகள் மற்றும் இரு நாடுகளும் பரஸ்பர ஆதரிக்கின்ற நாடுகள் தொடர்பாக நீடித்து வரும் கருத்து முரண்பாடுகள் காரணமாக, துருக்கி மற்றும் இஸ்ரேல் இடையே அரசியல் உறவுகள் பல ஆண்டுகளாக சீர்குலைந்த நிலையில் உள்ளன.
இந்த நிலையில், துருக்கியின் போர் விமான ஒப்பந்தம் இந்த நாடுகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கும் என சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்கிடையில், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகியவை இந்த விமானங்களை துருக்கி கிரீஸுக்கு எதிராக பயன்படுத்தக்கூடாது என நிபந்தனையைச் சுமத்தியுள்ளன. காரணம், கிரீஸ் மற்றும் துருக்கி இரண்டும் நேட்டோ உறுப்பினர்களாக உள்ளன.
இதே நேரத்தில், இந்தியா – துருக்கி உறவுகள் கடந்த சில ஆண்டுகளாக சரியாகவே நடக்கவில்லை. பாகிஸ்தானுடன் துருக்கி நெருக்கம் காட்டி வரும் நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியது, இந்தியாவின் அதிருப்திக்கு காரணமானது. மேலும், துருக்கி, இந்தியாவுக்கு எதிராக ட்ரோன் மற்றும் ஆயுத உதவிகளை பாகிஸ்தானுக்கு வழங்கியது. இதனை இந்தியா கடுமையாக எதிர்க்கும் நிலைப்பாட்டில் உள்ளது.
இதனை எதிர்கொள்வதற்காக, துருக்கிக்கு எதிராக இருக்கும் நாடுகளான இஸ்ரேல், சைப்ரஸ், கிரீஸ் ஆகியவற்றுடன் இந்தியா நெருக்கம் காட்டி வருகிறது. பிரதமர் மோடி சமீபத்தில் சைப்ரஸ் நாட்டுக்கு பயணம்செய்தார். இந்திய விமானப்படை அதிகாரிகள் கிரீஸில் பயணம்செய்தனர். இஸ்ரேலுடனும் இந்தியா பல ஆண்டுகளாக பாதுகாப்பு ஒத்துழைப்பை வளர்த்துவருகிறது.
இந்த சூழ்நிலையில், துருக்கியின் புதிய போர் விமான ஒப்பந்தம் அந்தந்த நாடுகளில் மட்டுமல்லாது, இந்தியாவிலும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த ஒப்பந்தம், மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா பகுதிகளில் புதிய அரசியல் நிலையை உருவாக்கும் அபாயம் உள்ளது.
English Summary
Turkey new move Erdogan targets 3 of India allies Awful background