மரண தண்டனைக்கு சில மணி நேரத்திற்கு முன் சிறை போனில் திருமணம்: ஈரானில் அரங்கேறிய சோகக் காதல் கதை!
Tragic Union Iranian Protestor Marries Partner via Prison Phone Hours Before Execution
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறையிலடைக்கப்பட்ட இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாக, சிறைச்சாலைத் தொலைபேசி வாயிலாகத் தனது காதலியைத் திருமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சிச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டதாக 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அலிரேஜா செபாஹி (25) மற்றும் மஹ்சத் கேஷானி (22) ஆகிய காதலர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் செபாஹிக்கு மரண தண்டனையும், கேஷானிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. செபாஹிக்கு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்பதை உணர்ந்த கேஷானி, சிறையிலேயே திருமணம் செய்துகொள்ள அனுமதி கோரியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இருவரின் தந்தையர்களின் முன்னிலையில் சிறைச்சாலைத் தொலைபேசி வழியாக இருவரும் திருமண உறுதிமொழி ஏற்று முறைப்படி மணம் முடித்துக்கொண்டனர். மனித உரிமைகள் வழக்கறிஞர் ஒருவரின் உதவியால் சாத்தியமான இந்த நிகழ்வின் போது, குர்ஆன், சில இனிப்புகள் மற்றும் சிவப்பு ரோஜா மலர் ஆகியவை பாரம்பரியமாக வழங்கப்பட்டன. இத்திருமணத்தின் போது அங்கிருந்த சிறை ஊழியர்களும் கண்ணீர் விட்டுப் புலம்பியதாகத் தெரிகிறது.
திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே, அதிகாலை அலிரேஜா செபாஹி தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மரணத்தின் வாசலிலும் தங்களின் காதலை உறுதிசெய்த இந்தச் சம்பவம் உலகளவில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tragic Union Iranian Protestor Marries Partner via Prison Phone Hours Before Execution