குழந்தைகளின் கதாநாயகன் அப்பா.. இன்று உலக தந்தையர் தினம்!!
Today world father's day
தாயின் அன்புக்கு நிகரானது தந்தையின் பாசம் என்றால் அது மிகையாகாது. குழந்தையை கருவில் சுமந்து பெற்றெடுப்பது தாய் என்றால், நாள் எல்லாம் நெஞ்சில் சுமப்பவர் தந்தை. குழந்தையின் ஆரோக்கியம் மீது தாய் கவனம் செலுத்துவது போல, அதன் முன்னேற்றத்திற்காக ஆயுள் முழுவதும் உழைப்பவர் தந்தை மட்டுமே ஆவார்.
ஒரு சில நேரங்களில் தந்தையிடம் கோபம், கண்டிப்பு இருந்தாலும் அவை தான் எதிர்கால வாழ்க்கைக்கு பாடம் என்பது பின்னாளில் தான் புரிகிறது. 'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை" என்னும் ஒளவையின் வாக்கில் எவ்வளவு உண்மை. தன் குழந்தைகளுக்கு ஆலோசனை கூறுவதில் தொடங்கி, அனுபவ பாடங்களை போதிப்பது வரை சிறந்த வழிகாட்டியாக எத்தனை பொறுப்புகள்.
அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காக, தங்கள் ஆயுள் முழுவதும் அர்ப்பணித்தவர்களில் தந்தைகளுக்கு முக்கிய இடம் உண்டு. இப்படிப்பட்ட தந்தையர்களை பெருமைப்படுத்தும் ஒருநாள் தான் சர்வதேச தந்தையர் தினம். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தந்தையர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
தந்தைக்கு நிகர் தந்தையே!!
குழந்தைகளுக்காக தன் வேலைப்பளுவையும் அதிகரித்துகொண்டு, குடும்ப பாரத்தையும் சுகமான சுமையாக தாங்குபவர்..
வீட்டிற்கு வெளியே எவ்வளவு கெடுபிடிக்கு ஆளானாலும், வீட்டிற்குள்ளே தன்னை ஒரு மகிழ்ச்சியான தந்தையாக காட்டிக் கொள்வதிலும் அவருக்கே பெருமை..
தன் மகன்ஃமகள் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் செல்ல தன் இருகால்களையும் சக்கரங்களாக மாற்றி உழைப்பவர்..
தன் குழந்தை சக நண்பர்களுக்கு இணையாக உடை உடுத்த, கந்தல் ஆடையை உடுத்தியவர்..
வெளியில் சிங்கமாகவும், புலியாகவும் வலம் வந்த தந்தை தன் மகளுக்காக மருமகனிடம் தாழ்ந்து செல்வார்..
தனக்கு ஆடை வாங்கும்போது விலையையும், குழந்தைகளுக்கு வாங்கும்போது தரத்தையும் பார்ப்பவர்..
குழந்தைகள் சாப்பிடாமல் தூங்கிவிட்டால், எழுப்பி சோறூட்டி மீண்டும் தூங்க வைப்பார்..
தனக்கு படிப்பு இல்லாவிட்டாலும் தன் குழந்தைகள் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்று கனவு காண்பார்..
இன்னும் எத்தனை எத்தனை சொல்ல முடியா வலிகளை அனுபவித்து கொண்டு வருகிறார்களோ தந்தையர்கள்!! கடவுளுக்கு மட்டுமே தெரியும்..!!

இந்த தினத்தை எப்படி கொண்டாடலாம்?
தந்தையர் தினத்தன்று நீங்கள் பெரிய கொண்டாட்டங்களிலோ, கேளிக்கைகளிலோ ஈடுபட வேண்டும் என்ற அவசியமில்லை. உங்கள் தந்தைக்கு வாழ்த்து தெரிவியுங்கள். அவருடன் சிறிது நேரம் செலவளியுங்கள். அவரின் மனதிற்கு பிடித்த இடத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்யுங்கள்.
தனக்கு பிடித்த எவ்வளவோ பொருட்களையும், எத்தனையோ ஆசைகளையும் குடும்ப தேவைகளை காரணம் காட்டி ஒதுக்கி வைத்தவர் உங்கள் தந்தை. எனவே அவரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வையுங்கள்.
உங்கள் தந்தை உங்கள் அருகில் இல்லை என்றால் அவரை இன்றைய தினம் நினைவு கூறுவதே உங்கள் தந்தைக்கு நீங்கள் அளிக்கும் மிகப்பெரிய பரிசு. தாய் நம் உயிர் என்றால், தந்தை நம் உடல். இரண்டில் எது பிரிந்தாலும், நமக்கு வாழ்வில்லை என்பதை புரிந்துகொண்டு அவர்களை சந்தோஷப்படுத்துங்கள்.