ஆப்கானிஸ்தானில் புர்கா விதிகளை மீறியதாக 30 பெண்கள் கைது; போராட்டத்தில் இருவர் உயிரிழப்பு; 20-க்கும் மேற்பட்டோர் காயம்; ஐநா அதிர்ச்சி தகவல்..!
The UN has revealed the shocking information that 30 women were arrested in Afghanistan for violating burqa regulations
ஆப்கானிஸ்தானில் புர்கா விதிகளை மீறியதாக 30-க்கும் மேற்பட்ட பெண்கள் தாலிபான்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக பெண்களுக்கான உரிமைகளை முன்னெடுக்கும் ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
''புர்கா அணிய வேண்டும், வாசனை திரவியங்களைப் பயன்படுத்தக் கூடாது போன்ற உத்தரவுகளை மீறியதாக 30-க்கும் மேற்பட்ட பெண்கள் ஜூன் 09-ஆம் தேதி தலிபான்களால் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்களில் சிலர் விடுவிக்கப்பட்டாலும், இந்த நடவடிக்கைகள் ஆப்கானிஸ்தான் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் மத்தியில் அச்சத்தையும் கவலையையும் அதிகரித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த நடவடிக்கைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியும் தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்துள்ளதாகவும், குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதோடு, 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலால் நியமிக்கப்பட்டுள்ள மனித உரிமை நிபுணர்கள் கூறியுள்ளதாவது;
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. எனினும், இதற்காக உயிரிழப்பை ஏற்படுத்தும் வன்முறையைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், ஆப்கானிஸ்தானில் நடைமுறை அதிகார மையமாகத் திகழும் தலிபான்கள், ஆப்கானிஸ்தான் கையெழுத்திட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் ஒப்பந்தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், சமத்துவம், அமைதியான முறையில் ஒன்று கூடுதல், கருத்து சுதந்திரம், நடமாடும் சுதந்திரம், தடுப்புக் காவலில் இருந்து பாதுகாப்பு ஆகிய அடிப்படை உரிமைகள், பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் நிலைமை மேலும் மோசமடைவதை தடுப்பதற்கும் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோன்று ஆப்கானிஸ்தானில் ஐநாவின் பணிகளை வழிநடத்தும் துணை சிறப்பு பிரதிநிதி ஜார்ஜெட் காக்னான் இது குறித்து கூறுகையில், ஆப்கானிஸ்தானில் ஒரு பெண் கைது செய்யப்படுவது அல்லது தடுத்து வைப்பது சமூகத்தில் அவருக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது. இதனால், விடுதலையான பிறகும் அவர்கள் குடும்ப வன்முறைக்கும் சமூக வன்முறைக்கும் உள்ளாகும் அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
English Summary
The UN has revealed the shocking information that 30 women were arrested in Afghanistan for violating burqa regulations