சிறு வயதில் ஆடு, மாடு மேய்த்த சிறுமியின் கைகளில் இன்று மாவட்டத்தின் நிர்வாகப் பொறுப்பு; சத்தியமங்கலத்தைச் சேர்ந்த வான்மதி IAS..!
The story of IAS officer Vanmathi from Sathyamangalam
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த IAS அதிகாரி வான்மதி. இவர்எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். காலையில் பள்ளிக்குச் சென்று வந்து, மாலை நேரங்களில் ஆடு, மாடு மேய்த்து குடும்ப கஷ்டத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளார். ஆனாலும், அவரது IAS என்ற கல்வி கனவுகளை ஒருபோதும் களைந்து விடவில்லை.
இவரது தந்தை ஓட்டுநராகப் பணியாற்றுபவர். ஆரம்பக் கல்வியும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியும் அரசுப் பள்ளியிலேயே வான்மதி கற்றுள்ளார். பள்ளிப் படிப்பை நிறைவு செய்ததுடன் அவருக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர் திட்டமிட்டனர். ஆனால், வான்மதிக்கு அதில் நாட்டம் இல்லை. மேற்கொண்டு படிப்பை தொடர்வதில் பிடிவாதமாக இருந்தார். தொடர்ந்து படித்த வான்மதி பட்டப்படிப்பை தொடர்ந்து முதுகலைப் பட்டத்தையும் பெற்றார்.


அதன் பிறகு இந்திய ஆட்சிப் பணியில் சேர வேண்டும் என்ற இலக்கை தேர்ந்தெடுத்து, UPSC சிவில் சர்வீஸ் தேர்வுக்காக தயாராகியுள்ளார். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொண்ட உழைப்பு, விடாமுயற்சி, மன உறுதி ஆகியவை அவருக்கு வெற்றியை தேடித்தந்துள்ளது.
அதன்படி, சிவில் சர்வீஸ் தேர்வில் இவரது தரவரிசை எண் 152. மஹாராஷ்டிரா கேடர் இவருக்கு ஒதுக்கப்பட்டது. பல்வேறு துறைகளிலும் சிறப்பாக பணியாற்றிய வான்மதி, தற்போது வர்தா மாவட்டத்தின் ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.
வான்மதியின் வாழ்க்கைப் பயணம், கிராமப்புற இளைஞர்களுக்கு, முக்கியமாக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற பிறகு, 'மஹாசம்பத்தி' என்ற ஒரு திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளார். இது மகாராஷ்டிராவின் வர்தா மாவட்ட நிர்வாகத்தால் அறிமு கப்படுத்தப்பட்ட ஓர் ஒருங்கிணைந்த சொத்து மற்றும் வருவாய் நிர்வாக முறை (Integrated Asset and Revenue Governance System) ஆகும்.
இதன் முக்கிய நோக்கம் அரசு சொத்துகள், நிலங்கள் மற்றும் பொதுச் சொத்துகள் தொடர்பான தகவல்களை முழுமையான டிஜிட் டல் பதிவேடு ஒன்றில் ஒரே தளத்தில் கொண்டு வந்து, அவற்றை வெளிப்படையாகவும் திறமையாகவும் நிர்வகிப்பதாகும். இதன் மூலம் அரசு நில ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து பாதுகாப்பது எளிது. வருவாய் நிர்வாகத்தை திறம்படச் செயல்படுத்தவும் முடியும்.
English Summary
The story of IAS officer Vanmathi from Sathyamangalam