இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமைக்கும், நட்புக்கும் அமெரிக்காவும், இஸ்ரேலும் தான் எதிரிகள்; ஈரான் உச்ச தலைவர்..!
Irans Supreme Leader says US and Israel are enemies of unity and friendship among Islamic countries
''பாரசீக வளைகுடா பகுதிகளில் உள்ள இஸ்லாமிய நாடுகள் ஒற்றுமையாக இருந்திருந்தால், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்துகொண்டு ஊழல்வாதிகளும், கொள்கையற்ற அயோக்கியர்களும் நமது நிலங்களையும் செல்வத்தையும் அபகரிக்கத் துணிந்திருப்பார்களா?.'' என்று ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி கேள்வி எழுப்பியதோடு, ''இஸ்லாமிய நாடுகள் தங்கள் உண்மையான எதிரியை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மொஜ்தபா காமேனி வெளியிட்ட எக்ஸ் பதிவில், குறிப்பிட்டுள்ளதாவது;
''இஸ்லாத்தின் எதிரியாக இருப்பவர்கள் இன, கலாச்சார, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் புவியியல் ரீதியான வேறுபாடுகளைப் பயன்படுத்தி முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தவும், அவர்களின் வலிமையைக் குறைக்கவும் முயற்சிக்கிறார்கள்.
எந்தவொரு பதவியில் இருப்பவரும், தெரிந்தோ தெரியாமலோ, வேண்டுமென்றே அல்லது தற்செயலாகவோ, முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தும் அல்லது இஸ்லாமிய சமூகத்திற்குள் மோதலை உருவாக்கும் செயலைச் செய்தால், அவர் இஸ்லாம் எதிர்ப்பு நோக்கங்களையே முன்னெடுத்துச் செல்கிறார் என்று அர்த்தம்.
இஸ்லாமியர்கள் உறுதியான மனவுறுதியுடன் கையை இறுக்கிப் பிடித்திருக்கும் ஒரே அணியாக இருந்திருந்தால், பாலஸ்தீன தேசம் இவ்வளவு பாதுகாப்பற்ற நிலையில் விடப்பட்டிருக்குமா?. மேலும் ஆக்கிரமிப்பாளர்களின் ஒடுக்குமுறைக்கும் குற்றங்களுக்கும் ஆளாக்கப்பட்டிருக்குமா?.
பாரசீக வளைகுடா பகுதிகளில் உள்ள இஸ்லாமிய நாடுகள் ஒற்றுமையாக இருந்திருந்தால், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்துகொண்டு ஊழல்வாதிகளும், கொள்கையற்ற அயோக்கியர்களும் நமது நிலங்களையும் செல்வத்தையும் அபகரிக்கத் துணிந்திருப்பார்களா?.
இஸ்லாமிய நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாக மேற்கு ஆசியப் பகுதி மற்றும் பாரசீக வளைகுடாப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுவது இதுதான்: உங்களின் உண்மையான எதிரி யார் என்பதை நீங்கள் அறிய வேண்டும். அவர்களின் சதித்திட்டங்களைப் புரிந்துகொள்ள வேண்டும், மேலும் அவர்களை எதிர்கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமைக்கும், நட்புக்கும் அமெரிக்காவும், இஸ்ரேலும் தான் எதிரிகள். அமெரிக்காவின் ஆட்சியாளர்களும், இஸ்ரேலும் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தின் மீதும் பகைமை கொண்டுள்ளன.
'''உலகளாவிய ஆணவ சக்திகளின்' தலைவர்கள் இஸ்லாமிய நாடுகளின் சில தலைவர்களை நோக்கி வெளிப்படுத்திய அப்பட்டமான அவமரியாதை மற்றும் இழிவான கருத்துகள் எங்கள் நினைவில் இன்னும் உள்ளது.'' என்று பதிவிட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமையன்று நாட்டின் பொருளாதார உத்தியை விளக்கி மொஜ்தபா காமேனி பேசுகையில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதும், முக்கிய பரிவர்த்தனைகளில் அமெரிக்க டாலர் மீதான சார்பைக் குறைப்பதும், சுயசார்பு கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அவசியமானவை என்பர் குறிப்பிட்டு இருந்தார்.
அத்துடன், பொருளாதார மீள்திறனை வெறும் கொள்கை முடிவாக மட்டும் பார்க்காமல், வெளிப்புற நிதி அழுத்தங்களை எதிர்கொள்வதற்கும் நீண்டகால ஸ்திரத்தன்மையை அடைவதற்கும் அவசியமான ஒரு தேசிய கட்டமைப்பாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Irans Supreme Leader says US and Israel are enemies of unity and friendship among Islamic countries