ரவுடி கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம்...! முன்விரோதத்தில் வெட்டிக் கொன்றதாக தம்பதி கைது...!
sensational twist rowdy murder case Couple arrested stabbing death over previous enmity
முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடியை தோட்டத்திலேயே வெட்டிக் கொன்றதாக கூறப்படும் வழக்கில், அவரது கூட்டாளியும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். கூடங்குளம் அருகே நடந்த இந்தப் பரபரப்பு கொலை சம்பவத்தில், குளத்தை குத்தகைக்கு எடுத்த விவகாரத்தில் ஏற்பட்ட பணம் தொடர்பான தகராறே கொலைக்கான காரணமாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குமரி மாவட்டம் தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகன் செல்வம் (46). பிரபல ரவுடியான இவர் மீது குமரி, தூத்துக்குடி தாளமுத்துநகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

செல்வத்துக்கு சொந்தமான தோட்டம் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே சங்கனேரி கிராமத்தில் உள்ளது. சம்பவத்தன்று அந்தத் தோட்டத்துக்கு சென்ற செல்வத்தை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கூடங்குளம் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கினர். கொலைக்கான காரணம் மற்றும் இதில் தொடர்புடையவர்கள் யார் என்பதை கண்டறிய தீவிர விசாரணை நடத்தப்பட்டது.ஆய்வாளர் நவீன் உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளர் வினோத்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை காவலர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி, செல்வத்துடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவர்களுக்கிடையேயான பிரச்சினைகள் குறித்து தகவல்களை திரட்டினர்.அப்போது, பொட்டல்குளம் பகுதியைச் சேர்ந்த சந்துரு (26) மற்றும் அவரது மனைவி கவுரி ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரையும் பிடித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், செல்வமும் சந்துருவும் இணைந்து குளம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து, அதில் தாமரைப் பூக்களை வளர்த்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.சமீபத்தில் மற்றொரு குளத்தை குத்தகைக்கு எடுத்தது தொடர்பாக இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை நாளடைவில் கடும் முன்விரோதமாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த முன்விரோதத்தின் காரணமாக செல்வத்தை சந்துருவும் கவுரியும் சேர்ந்து கொலை செய்ததாக காவலர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து சந்துரு மற்றும் கவுரி ஆகிய இருவரையும் காவலர்கள் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்தக் கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் எங்கே மறைக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் காவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
English Summary
sensational twist rowdy murder case Couple arrested stabbing death over previous enmity