'கிளர்ச்சியாளர்களை தூண்டிவிட்ட ட்ரம்ப் தான் குற்றவாளி'; ஈரான் உச்ச தலைவர் குற்றசாட்டு..!
Irans Supreme Leader accuses Trump of being the culprit for inciting the rioters
ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த அந்நாட்டு மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனையடுத்து நிலைமை மோசமடைந்துள்ளதால்,மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்காவின் பொருளாதாரத்தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால், பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த வன்முறை சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, பலியானோர் எண்ணிக்கை 03 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்த சூழலில், ''போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால், ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்துவோம்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் அமெரிக்கா- ஈரான் இடையே போர் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஈரான் ஏற்பட்ட வன்முறை மற்றும் அதன்மூலம் ஏற்பட்ட உயிரிழப்புக்கு காரணமாக போராட்டத்தை ஆதரித்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என ஈரான் உச்சதலைவர் அபயதுல்லா அலி கமேனி குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரான் அரசு தொலைக்காட்சியில், பேசிய கமேனி "போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கிளர்ச்சியின் போது, அமெரிக்க அதிபர் நேரடியாகப் பேசி, கிளர்ச்சியாளர்களை தூண்டிவிட்டு, நாங்கள் உங்களுக்கு ஆதரவளிக்கிறோம், நாங்கள் உங்களுக்கு ராணுவ ரீதியாகவும் ஆதரவளிக்கிறோம் என்று கூறினார்.
அமெரிக்கா ஈரானின் பொருளாதார மற்றும் அரசியல் வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயல்கிறது. உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் காரணமாகவும், ஈரானிய தேசத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் காரணமாகவும், நாங்கள் அமெரிக்க ஜனாதிபதியை ஒரு குற்றவாளியாகவே கருதுகிறோம்.
போராட்டக்காரர்கள் அமெரிக்காவின் காலாட்படை வீரர்கள். அவர்கள் மசூதிகளையும் கல்வி மையங்களையும் அழித்துவிட்டனர். மக்களைத் துன்புறுத்துவதன் மூலம் அவர்கள் ஆயிரக்கணக்கானோரைக் கொன்றனர்.'' என்று கமேனி குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
Irans Supreme Leader accuses Trump of being the culprit for inciting the rioters