டிரம்ப் மீது துப்பாக்கி சூடு; காயத்துடன் கூட்டத்தில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஈரான் மிரட்டல்..!
Iran threatens Trump saying this time the target will not be missed
ஈரான் நாட்டில் பணவீக்கம், அதிகரித்துள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவற்றால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்நாட்டில், 30-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 100 நகரங்களில் போராட்டம் நீடித்து வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட அந்நாட்டு உச்ச தலைவர் உத்தரவிட்டுள்ளமையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

வன்முறையை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவை முடக்கப்பட்டது. அசாதார நிலைமை சீரான பின்னர் மீண்டும் இணையதள சேவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அத்துடன், சில அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 3,428 பேர் பலியாகியுள்ளதாக என நார்வே நாட்டை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஈரானின் அரசு தொலைக்காட்சியில் டிரம்ப்பின் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, 2024-ஆம் ஆண்டு ஜூலையில் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் அவருடைய காது பகுதியில் துப்பாக்கி குண்டு உரசி சென்றது. இந்த கொலை முயற்சியில் டிரம்ப் உயிர் தப்பினார். இந்த சூழலில், காயத்துடன் கூட்டத்தில் டிரம்ப் நிற்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, இந்த முறை குறி தப்பாது என ஈரான் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் அரசு, அந்நாட்டில் மக்கள் படுகொலையை நிறுத்தாவிட்டால் அந்நாட்டுக்கு எதிராக ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது சர்ச்சையான நிலையில், டிரம்புக்கு ஈரான் மிரட்டல் விடும் வகையிலான இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், டிரம்ப் மீது 2024-ஆம் ஆண்டில் நடந்த தாக்குதலுக்கு ஈரானுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
English Summary
Iran threatens Trump saying this time the target will not be missed