பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுவது போலி செய்தி; ட்ரம்பின் பேச்சை கிண்டல் செய்த ஈரான்..!
Iran Mocks Trumps Speech
அணு ஆயுத போட்டி காரணமாக ஈரான் மீது அமெரிக்கா + இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருவதால் போர் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், ஈரானுடன் போரை நிறுத்துவதற்கு மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தைகள் நடந்ததாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், அதற்கு மாறாக அடுத்த நாளே இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள் மூலம் சரமாரியாக தாக்கியுள்ளது.
முன்னதாக. தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ஈரான் போர் குறித்து கருது தெரிவித்த ட்ரம்ப், "இந்த முறை, ஈரான் உறுதியாக உள்ளது, அவர்கள் ஒரு தீர்வைக் காண விரும்புகிறார்கள். அவர்கள் அமைதியை விரும்புகிறார்கள். ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது திட்டமிடப்பட்டிருந்த அனைத்து ராணுவத் தாக்குதல்களையும் 05 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளோம்' என்று கூறியிருந்தார்.
இதற்கு, கருது தெரிவித்த ஈரான், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை. ட்ரம்பின் கருத்துகள் போலியானவை, நிதி மற்றும் எண்ணெய் சந்தைகளை நிலைநிறுத்த அவர் பேசிய பேச்சு என்றும் ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அத்துடன், தென்னாப்பிரிக்காவில் உள்ள ஈரானின் தூதரகம் தங்களது X தளத்தில், பயணிகள் இருக்கைக்கு முன்னால் உள்ள காரின் டாஷ்போர்டில் ஒரு குழந்தையின் இளஞ்சிவப்பு (pink) நிற ஸ்டீயரிங் சக்கரம் வைக்கப்பட்டிருக்கும் ஒரு படத்தை வெளியிட்டு ட்ரம்பின் பேச்சை கேலி செய்துள்ளது. அதில் ஹார்முஸ் ஜலசந்தி என்னாலும் அயதுல்லாவாலும் கட்டுப்படுத்தப்படும் என்றும் கிண்டலாக எழுதப்பட்டிருக்கிறது.
அமெரிக்க அதிபரின் கட்டுப்பாட்டுக்கு பிறகும் ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பஹ்ரைன், சவூதி அரேபியா மற்றும் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளை இரவு முழுவதும் தொடர்ந்து தாக்கியுள்ளன. அமெரிக்கப் படைகளும் ஈரானில் உள்ள இலக்குகளைத் தொடர்ந்து தீவிரமாகத் தாக்கி வருகின்றதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேப்போன்று, மத்திய ஈரானின், iRGC-யின் உளவுப் பிரிவு மற்றும் உளவுத்துறை அமைச்சகத்துடன் தொடர்புடைய வசதிகள் உள்ளிட்ட முக்கிய கட்டளை மையங்களைக் குறிவைத்து, தங்களது போர் விமானங்கள் ஒரு பெரிய அளவிலான தாக்குதல்களை நேற்று நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் மறுபுறம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பாலிஸ்டிக் ஏவுகணை சேமிப்பு மற்றும் ஏவுதளங்கள் உட்பட, ஒரே இரவில் 50-க்கும் மேற்பட்ட பிற இலக்குகளையும் தாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளது. தற்போதையை சூழலில் வளைகுடாவில் மோதல் தணிவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.