நிலநடுக்கத்தால் நிலைகுழைந்துள்ள கொலம்பியா; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 132 ஆக அதிகரிப்பு; 2,000க்கும் மேற்பட்டோர் மாயம்..!
Death toll from Colombia earthquake rises to 132 more than 2000 missing
கொலம்பியாவில் ஏற்பட்ட மிக் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2,000 பேர் மாயமாகியுள்ளதாக கொலம்பியா செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று கொலம்பியாவின் சோகோ மாகாணம், சான் ஹோசே டெல் பால்மர் நகரை மையமாகக் கொண்டு, 7.4 ரிக்டர் அளவில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்நாட்டு நேரப்படி காலை 7.34 மணிக்கு ஏற்பட்டுள்ளது. கொலம்பியாவின் சான் ஹோசே டெல் பால்மர் பகுதிக்கு அருகே, சுமார் 107 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், தலைநகர் பகோடாவில் இருந்து 280 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால், சான் ஹோசே டெல் பால்மர், கலி, பெரேரா, மனிசாலெஸ் உள்ளிட்ட நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் சிக்கி இதுவரை சுமார் 132 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 570 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த கட்டிட இடிபாடுகளில் ஆயிரக்கணக்கானோர் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்க ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். தற்போது அங்கு மீட்பு பணி தீவிரம் அடைந்துள்ளது.
கொலம்பியாவின் பெரேரா நகரில் சுமார் 5 லட்சம் மக்கள் வசித்து வந்த நிலையில் அங்கு நிலநதிக்கத்தினால் பாதிப்பு மிக தீவிரமாக ஏற்பட்டுள்ளதாக கொலம்பிய தலைநகரங்களின் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த நகரில் மட்டும் சுமார் 64 பேர் பூகம்பத்தால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி மாயமான 2,000 பேரில் பெரேரா மற்றும் கலி நகரை சேர்ந்தவர்களே அதிகம் என கூறப்படுகிறது. இதேவேளை இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
இது குறித்து கொலம்பிய அதிபர் அபெலார்டோ தெரிவித்த தகவலின் படி சுமார் 1,577 கட்டிடங்கள் இந்த பூகம்பத்தில் சேதமடைந்துள்ளதாகவும், அதில் 18 சுகாதார மையங்கள், 52 பள்ளிகள் அடங்கும் என கூறப்படுகிறது.

இதில் சுமார் 37 கட்டிடங்கள் முழுவதுமாக இடிந்துள்ளதாகவும், 60 கட்டிடங்கள் சரிந்துள்ளதகவும், மற்ற கட்டிடங்கள் பகுதி அளவில் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூகம்பம் காரணமாக கொலம்பியாவின் மேற்கு பகுதியில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு செயல்படும் பெரும்பாலான விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. சில விமான நிலையங்கள் கட்டுப்பாடுகளுடன் செயல்படுகிறது.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் அந்நாட்டு விமானப்படை களத்தில் இறங்கி உள்ளது. மேலும், விமான நிலைய கட்டிடங்களில் பாதிப்பு ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள கொலம்பியாவுக்கு அமெரிக்க அரசு சுமார் 15.5 மில்லியன் டாலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியை கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான முகாம், உணவு, மருந்துகள், பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்டவற்றை பெற கொலம்பியாவுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூகோள ரீதியாக கொலம்பியா அமைந்துள்ள பகுதியில் நிலநடுக்கம் அதிகம் உணரப்படும். மாதந்தோறும் அங்கு லேசான அளவில் நிலநடுக்கம் உணரப்படும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை அன்று ஏற்பட்ட பூகம்பத்துக்கு பின்னரும் அந்நாட்டு புவியியல் சேவை மையம் நிலநடுக்க எச்சரிக்கையை விடுத்திருந்தது.
முன்னதாக, கடந்த 1999-இல் அந்நாட்டின் ஆர்மீனியா மற்றும் பெரேரா பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தில் சுமார் 1,000 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Death toll from Colombia earthquake rises to 132 more than 2000 missing