ஏழைகளுக்கு பாரபட்சமற்ற மருத்துவ உதவி தேவை...! - தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் முக்கிய கோரிக்கை...!
poor need impartial medical assistance TTV Dhinakaran main request Tamil Nadu government
தமிழக அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில்தான் “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்திருப்பது, தமிழக தாய்மார்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அரசு மருத்துவமனைகளில் நிலவும் அடிப்படை குறைபாடுகளை சரிசெய்வதற்குப் பதிலாக, தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் மூலம் பொதுமக்களை அரசு மருத்துவமனைகளுக்கு வரவழைக்கலாம் என்ற கருத்தை அமைச்சர் வெளிப்படுத்தியிருப்பது ஏற்கத்தக்கதல்ல என்று தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்பு மருத்துவத்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்குவோம் என்ற வாக்குறுதியுடன் தவெக ஆட்சிக்கு வந்ததாகவும், ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்று 3 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் மருத்துவத்துறையின் அடிப்படை பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படவில்லை என்றும் டி.டி.வி. தினகரன் விமர்சித்துள்ளார்.
குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லாமை, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் எலித்தொல்லை, நோயாளிகளுக்கு சேவை வழங்க போதுமான தூய்மைப் பணியாளர்கள் இல்லாத நிலை, கைப்பேசி வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலநிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நீடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், அங்கு சிகிச்சை பெற வரும் ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை உறுதி செய்வதற்கும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.அரசு மருத்துவமனைகளில் நிலவும் குறைகளை களையாமல், ஒரு கிராம் தங்க மோதிரத்தை வழங்கினால் போதும்; பெண்கள் அரசு மருத்துவமனைகளை நாடி வருவார்கள் என்ற தொனியில் அமைச்சர் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
மக்களின் நலனுடன் நேரடியாக தொடர்புடைய மருத்துவத்துறையில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, வெறும் திட்ட அறிவிப்புகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்பதற்காக மக்களை எவ்வாறு வேண்டுமானாலும் பேசலாம், இழிவுபடுத்தலாம் என்ற அதிகாரப் போக்கை கைவிட்டு, அரசு மருத்துவமனைகளை நம்பி வரும் பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகளும், தரமான சிகிச்சையும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையையும், தமிழக அரசையும் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இவ்வாறு அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
poor need impartial medical assistance TTV Dhinakaran main request Tamil Nadu government