அடிதடியில் முடிந்த தகராறு...! தாய், மகனைத் தாக்கி மிரட்டிய கேரளா சிப்ஸ் நிறுவன அதிபர் கைது...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில், கேரளாவில் செயல்பட்டு வரும் சிப்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய இளைஞரிடம், ஏற்கனவே வழங்கப்பட்ட சம்பளத்தில் ஒரு பகுதியை திருப்பிக் கொடுக்குமாறு வலியுறுத்தி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் நிறுவன உரிமையாளர், இளைஞரையும் அவரது தாயையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் நிறுவன உரிமையாளரை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி ராஜமணியபுரத்தைச் சேர்ந்த ஜெயநாதன்-மோகனா தம்பதியின் மகன் பாலமுருகன். இவர், ஆறுமுகனேரி காணியாளர் தெருவைச் சேர்ந்த கருப்பசாமிக்கு சொந்தமான கேரளாவில் இயங்கி வரும் சிப்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் சுமார் 3 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பாலமுருகனுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்குவதாக பேசி வேலைக்கு சேர்த்ததாக கூறப்படுகிறது. ஆனால், பணிச்சுமை அதிகமாக இருந்ததால் அவர் அங்கு 40 நாட்கள் மட்டுமே பணியாற்றியுள்ளார். பின்னர் ரூ.19 ஆயிரம் சம்பளத்தை பெற்றுக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், நிறுவன உரிமையாளர் கருப்பசாமி மோகனாவின் வீட்டிற்கு சென்று, பாலமுருகன் பணியாற்றிய நாட்களுக்கு ரூ.12 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்க முடியும் என்றும், ஏற்கனவே பெற்றுள்ள மீதமுள்ள ரூ.7 ஆயிரத்தை திருப்பி வழங்க வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது.இதற்கு மோகனா மற்றும் அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கருப்பசாமி தனது தாய் இசக்கியம்மாளுடன் மோகனாவின் வீட்டிற்கு மீண்டும் சென்றுள்ளார். அங்கு பாலமுருகனின் கைபேசியை பறித்துக்கொண்டு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்த அலுமினிய வாளியால் மோகனாவையும் பாலமுருகனையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், இரவுக்குள் பணத்தை திருப்பி வழங்காவிட்டால் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றதாக தெரிகிறது.தாக்குதலில் காயமடைந்த மோகனா மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரும் காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

பின்னர் சம்பவம் தொடர்பாக மோகனா ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இதையடுத்து சிப்ஸ் நிறுவன உரிமையாளர் கருப்பசாமியை காவலர்கள் கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dispute ended fight Kerala Chips CEO arrested attacking and threatening mother and son


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->