'50 வருட சாதனை... வெறும் 5 ஆண்டுகளில்'...! - எதிர்க்கட்சிகளுக்கு சேகர்பாபுவின் அதிரடி பதிலடி...!
50 years of achievement just 5 years Sekarbabu sharp response opposition parties
தி.மு.க. ஆட்சியின் 5 ஆண்டு கால செயல்பாடுகளை பட்டியலிட்டு பேசிய முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பல ஆண்டுகளாக செய்யப்படாமல் இருந்த பணிகளுக்கு தங்கள் ஆட்சியில் வேகம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.கோவில் சொத்துகளை பாதுகாப்பது, ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்களை மீட்பது, கோவில் திருப்பணிகளை மேற்கொள்வது என பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாப்பதில் தி.மு.க தனி கவனம் செலுத்தி வந்ததாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.“நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தோமா?” என்று கேள்வி எழுப்புபவர்கள், அரசு மேற்கொண்டுள்ள பணிகளின் விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துகள் தொடர்பாக விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்கள் மற்றும் பிற சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.இதன் விளைவாக ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பிலான அறநிலையத்துறை சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்கள் மீண்டும் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
“ஆண்டுக்கணக்கில் கவனிக்கப்படாமல் கிடந்த சொத்துகளை மீட்கவும், கோவில்களின் உரிமைகளை நிலைநாட்டவும் அரசு களத்தில் இறங்கி செயல்பட்டுள்ளது. தூக்கத்தை கலைத்து பணியாற்றியதன் விளைவாகவே இந்த சாதனைகள் சாத்தியமாகியுள்ளன” என்றும் அவர் தெரிவித்தார்.தமிழகத்தின் முக்கிய ஆன்மிகத் தலங்களில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல், கோவில் கட்டமைப்புகளை பாதுகாத்தல், திருப்பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சேகர்பாபு தெரிவித்தார்.
சமயபுரம் உள்ளிட்ட முக்கிய கோவில் தலங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள், கோவில் நிர்வாகம் மற்றும் திருப்பணிகளுக்கு அரசு அளித்து வரும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.தி.மு.க. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்கள், ஆட்சியின் சாதனைகளை தொகுத்து வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தை ஒருமுறை புரட்டிப் பார்க்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
அதிகாரிகளை அச்சுறுத்துவது, ஆவேசமாக வார்த்தைகளை உதிர்ப்பது போன்றவற்றை மட்டுமே அரசியல் செயல்பாடாகக் கொண்டிருப்பவர்கள், தி.மு.க மேற்கொண்டுள்ள மக்கள் நலப் பணிகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் நிறைவேற்றப்பட்ட பணிகளின் எண்ணிக்கையை பார்க்கும்போது, நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பல்வேறு மக்கள் பணிகளுக்கு தீர்வு காணப்பட்டிருப்பது தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார்.“50 ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டிய மக்கள் பணிகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய ஆட்சியாக தி.மு.க. திகழ்கிறது” என்று சேகர்பாபு தெரிவித்துள்ளார்
English Summary
50 years of achievement just 5 years Sekarbabu sharp response opposition parties