'மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க வேண்டும்'; வலியுறுத்தும் வங்கதேசம்; இந்தியா கூறுவது என்ன..?
Bangladesh urges India to hand over death row indicted Sheikh Hasina
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வங்கதேச இடைக்கால அரசு, இந்தியாவுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுப்பது தவறு. எங்களிடம் இந்தியா ஒப்படைக்க வேண்டும்.
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக வேறு எந்த நாட்டாலும் தண்டிக்கப்பட்ட இந்த நபர்களுக்கு அடைக்கலம் வழங்குவது மிகவும் நட்பற்ற செயலாகவும், நீதியை புறக்கணிப்பதாகவும் இருக்கும். ஷேக் ஹசீனா வங்கதேசத்திற்கு திரும்புவதை உறுதி செய்வது இந்தியாவின் கடமை மற்றும் பொறுப்பு ஆகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அறிவித்த தீர்ப்பை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. நெருங்கிய அண்டை நாடாக, வங்கதேச மக்களின் நலன்களுக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது, அதில் அமைதி, ஜனநாயகம், உள்ளடக்கம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை அடங்கும். நாங்கள் எப்போதும் ஆக்கப்பூர்வமாக செயல்படுவோம்.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Bangladesh urges India to hand over death row indicted Sheikh Hasina