பிரதமர் மோடி வருகை: கோவையில் 3,000 போலீஸார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தில் மாற்றம்..!
3000 police personnel deployed for security and traffic arrangements ahead of Prime Minister Modis visit to Coimbatore
தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பின் சார்பில் நாளை மறுநாள் (19-ம் தேதி) கோவை இயற்கை விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா அரங்கில் நடைபெறவுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றவுள்ளார். பிரதமர் தமிழகம் வருகையையொட்டி, 03 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாநகரில் போக்குவரத்தில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டில், தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயற்றை விவசாயிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்வில், சிறப்பாக செயல்பட்ட 18 இயற்கை விவசாயிகளுக்கு பிரதமர் விருதுகளை வழங்குகிறார். அதன் பின்னர், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 50 இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் பிரதமர் கலந்துரையாடவுள்ளார். இதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் புட்டபர்த்தியில் இருந்து மதியம் 12.30 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு, மதியம் 01.25 மணிக்கு கோவைக்கு வரவுள்ளார்.

விமான நிலையத்திலிருந்து கார் மூலமாக புறப்பட்டு, 01.40 மணிக்கு கொடிசியா அரங்கிற்கு செல்லவுள்ளார். நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மதியம் 03.15 மணிக்கு கொடிசியாவில் இருந்து கார் மூலமாக புறப்பட்டு 03.30 மணிக்கு விமான நிலையத்தை அடைந்து புதுடெல்லிக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
இந்நிலையில், பிரதமரின் வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநகர காவல் ஆணையர் ஆ.சரவணசுந்தர் தலைமையில் 03 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொடிசியா சாலையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஏதுவாக, சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாடு நடக்கும் கொடிசியா வளாகம் முழுவதும் இந்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், பீளமேடு சர்வதேச விமான நிலையத்திலும் 05 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கோவை மாநகரில் நாளை மறுநாள் மதியம் 12 மணி முதல் மாலை 04 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவிநாசி சாலை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூர ஜி.டி.நாயுடு மேம்பாலமும் நாளை மறுநாள் மதியம் 12 மணி முதல் மாலை 03 மணி வரை மூடப்படும் என போலீஸார் அறிவித்துள்ளனர். இதற்கிடையே, மாநாட்டுக்கான ஏற்பாட்டுப் பணிகள் குறித்து விழா ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் குழுவினர் இன்று (நவம்பர்-17) கொடிசியாவில் ஆய்வு செய்தனர்.
அதைத் தொடர்ந்து பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளதாவது: 'இயற்கை விவசாயிகள் மாநாட்டில், விவசாயிகளின் அழைப்பை ஏற்று பிரதமர் பங்கேற்பது மிகவும் முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறது. பிரதமர் பார்வையிடுவதற்காக இயற்கை வேளாண் உற்பத்திப் பொருட்கள், சிறு தானியங்க, பழ வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் 16 அரங்கங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. அதை பிரதமர் திறந்து வைத்து பார்வையிடுகிறார்' என்று குறூறியுள்ளார்.
English Summary
3000 police personnel deployed for security and traffic arrangements ahead of Prime Minister Modis visit to Coimbatore